Toyota Taisor – ரூ.8 லட்சத்துக்குள் வரவுள்ள டொயோட்டா டைசோர் எதிர்பார்ப்புகள்

டொயோட்டா மற்றும் மாருதி கூட்டணியில் அடுத்த ரீபேட்ஜ் காராக வரவுள்ள அர்பன் க்ரூஸர் டைசோர் ( Urban Cruiser Taisor) க்ராஸ்ஓவர் எஸ்யூவி மாடல் மாருதி விற்பனை செய்து வருகின்ற ஃபிரான்க்ஸ் காரின் அடிப்படையிலான மாடலாகும்.

இரு நிறுவனங்களுக்கு இடையிலான ஒப்பந்தம் மூலம் எர்டிகா ரீபேட்ஜ் ரூமியன், ஹைரைடர் ரீபேட்ஜ் கிராண்ட் விட்டாரா, இன்னோவா ஹைகிராஸ் ரீபேட்ஜ் இன்விக்டோ மற்றும் பலேனோ ரீபேட்ஜ் கிளான்ஸா ஆகியவை இந்திய சந்தையில் விற்பனை செய்து வருகின்றது.

Toyota Taisor

பலேனோ அடிப்படையில் கிராஸ்ஓவர் ரக எஸ்யூவி மாடலாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள மாருதி ஃபிரான்க்ஸ் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளதை தொடர்ந்து இந்த மாடலை டைசோர் என்ற பெயரில் டொயோட்டா விற்பனைக்கு 2024ஆம் ஆண்டின் துவக்க மாதங்களில் விற்பனைக்கு வெளியிட உள்ளது.

ஃபிரான்க்ஸின் அடிப்படையான கட்டுமானத்தை பெற உள்ள டைசோரில் தன்னை வேறுபடுத்திக் கொள்ள சிறிய அளவிலான டிசைன் மாற்றங்கள் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தனித்துவமான முன்பக்க கிரில், புதிய முன் மற்றும் பின்புற பம்ப்பர் மற்றும் தனித்துவமான அலாய் வீல் வடிவமைப்பு பெற்றதாக அமைந்திருக்கலாம்.

இன்டிரியர் வசதிகளை பொறுத்தவரை மிதக்கும் வகையிலான 9 இன்ச் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஏர் வென்ட்கள், மூன்று ஸ்போக் பெற்ற ஸ்டீயரிங் வீல் மற்றும் ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே ஆகியவை அடங்கும்.

fronx safe

கூடுதலாக அம்சங்களாக பார்க்கிங் உதவிக்காக 360 டிகிரி கேமரா மற்றும் 40 க்கும் மேற்பட்ட இணைக்கப்பட்ட நுட்பங்களை வழங்கும் டொயோட்டா கனெக்ட் வசதியை பெறலாம்.

டொயோட்டா டைசோர் காரில் 1.2 லிட்டர் மைல்டு ஹைபிரிட் சிஸ்டத்தை பெற்ற பெட்ரோல் என்ஜின் அதிகபட்சமாக 90 hp குதிரைத்திறன் மற்றும் 113 Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. டிரான்ஸ்மிஷன் ஆப்ஷனை பொறுத்தவரை 5 வேக மேனுவல் மற்றும் 5 வேக ஆட்டோமேட்டிக் மேனுவல் கியர்பாக்ஸ் என இரண்டையும் பெறலாம்.

இதுதவிர,  1.0-லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் (மைல்டு ஹைபிரிட்) 100 PS பவர் மற்றும் 148 Nm டார்க் வெளிப்படுத்தும். இதில் ஐந்து வேக மேனுவல் மற்றும் ஆறு வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இடம்பெறும்.

டைசோர் 1.2-லிட்டர் பெட்ரோல் என்ஜின் மேனுவல் கியர்பாக்ஸ் பெற்ற வேரியண்ட் மைலேஜ் லிட்டருக்கு 21.79 kmpl  மற்றும் AMT கியர்பாக்ஸ் பெற்ற மாடல் மைலேஜ்  22.89 kmpl வரை வழங்குகிறது; 1.0-லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் பெற்ற மேனுவல் கியர்பாக்ஸுடன் 21.5 kmpl மைலேஜ் மற்றும் ஆட்டோமேட்டிக் மாடல் மைலேஜ் லிட்டருக்கு 20.01 kmpl வழங்கலாம்.

மேலும் சிஎன்ஜி தேர்விலும் ஃபிரான்க்ஸ் கிடைக்கும் நிலையில் டைசோர் சிஎன்ஜி பதிப்பிலும் விற்பனைக்கு எதிர்பார்க்கலாம்.

maruti fronx

டொயோட்டாவின் டைசோர் விற்பனைக்கு ஜனவரி 2024 ஆம் ஆண்டின் துவக்க மாதங்களில் எதிர்பார்க்கலாம். ரூ.7.47 லட்சத்தில் ஃபிரான்க்ஸ் துவங்குவதனால் டைசர் ரூ.8 லட்சத்துக்குள் துவங்கி ரூ.12.50 லட்சத்துக்குள் (எக்ஸ்-ஷோரூம் விலை) நிர்ணயம் செய்யப்படலாம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.