தைரியம் என்பது எனது பெயர் : கெத்து காட்டும் குஷ்பு

இலங்கையில் உள்நாட்டு போர் முடிவுக்கு வந்த நிலையில் அங்கு தமிழ் படங்களின் படப்பிடிப்புகள், படங்கள் வெளியீடு மீண்டும் அதிகரித்துள்ளது. அதேபோன்று இசை நிகழ்ச்சிகளும் நடக்கத் தொடங்கி உள்ளது. சமீபத்தில் சந்தோஷ் நாராயணன் அங்குள்ள மக்களுக்காக இலவசமாக இசை நிகழ்ச்சி நடத்தினார். இந்த நிலையில் தற்போது அங்கு பாடகர் ஹரிஹரனின் இசை நிகழ்ச்சி நடக்கிறது. இந்த நிகழ்ச்சியில் குஷ்பு தொகுப்பாளராக பணியாற்ற உள்ளார் என்ற அறிவிப்பு வெளியானது. தற்போது அவர் அந்த பணியில் இருந்து விலகி விட்டதாக தகவல்கள் வெளியானது.

குஷ்பு இலங்கை தமிழர்களுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டவர் அதனால் அவர் இலங்கைக்கு வரக்கூடாது என்று அங்குள்ள சில தமிழ் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்ததாகவும், அதனால் குஷ்பு விலகி விட்டதாகவும் கூறப்பட்டது. இதுகுறித்து குஷ்பு தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருப்பதாவது:

“நான் யாருக்கும் பயப்படவில்லை. இலங்கையில் ஹரிகரன் இசை நிகழ்ச்சியில் பங்கேற்காமல் நான் விலகிய காரணம் எனது மாமியாரின் உடல்நிலை. அவருக்கு இருதய அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்து இருப்பதால் இலங்கை நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. எனது முன்னுரிமை அவரது ஆரோக்கியத்துக்குத்தான். பெயர் தெரியாதவர்கள், முகம் தெரியாதவர்கள் என்னை ஒருபோதும் மிரட்ட முடியாது. தயவு செய்து வேறு கதவை தட்டுங்கள். தைரியம் என்பது எனது பெயர்'' என்று கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.