இனி பௌலர்கள் இப்படி செய்தால் பேட்டிங் அணிக்கு 5 ரன்கள்… ஐசிசியின் புதிய விதி என்ன?

ICC New Rules For Bowlers: விளையாட்டு என்றாலே அதில் விதிமுறைகள் இருப்பது வழக்கம்தான். அந்த விதிமுறைகளுக்கு கட்டுப்பட்டுதான் வீரர்கள் அந்த விளையாட்டை விளையாட வேண்டும். கிரிக்கெட்டில் இதுபோன்ற எக்கச்சக்க விதிகள் இருக்கின்றன. ஆனால் பலருக்கு பல விதிகள் குறித்த விழிப்புணர்வு இருக்காது, குறிப்பாக அனுபவ வீரர்களுக்கு கூட சில விதிகள் தெரியாது.

சர்ச்சையான Timed Out

உதாரணத்திற்கு நடந்து முடிந்த 2023 உலகக் கோப்பை தொடரிலும் கூட வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை வீரர் ஆஞ்சலோ மேத்யூஸ் Timed Out முறையில் ஆட்டமிழந்தார். இந்த முறையில் ஆட்டமிழக்கும் முதல் சர்வதேச வீரர் மேத்யூஸ்தான். அதாவது, சமிரா சமரவிக்ரம ஆட்டமிழந்த பின் பெவிலியனில் இருந்து 2 நிமிடத்தில் அடுத்து பேட்டிங் வர வேண்டிய மேத்யூஸ், கூடுதலாக நேரம் எடுத்தார் என வங்கதேச அணியின் கேப்டன் ஷகிப் அல்-ஹாசன் கள நடுவர்களிடம் முறையிட்டார். 

இதில் அவர் கூடுதலாக நேரம் எடுக்கப்பட்டது உறுதியானதாக கூறி அவருக்கு அவுட் கொடுக்கப்பட்டது. இருப்பினும்தான் ஹெல்மட் பழுதானது என்பதால்தான் சற்று நேரம் எடுத்ததாக மேத்யூஸ் தனது தரப்பை கூறினாலும், அவர் ஹெல்மட்டை கேட்பதற்கு முன்னரே நேரம் தாண்டிவிட்டதாக போட்டி நடுவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஷகிப் அல்-ஹாசனும் இந்த முறையீட்டில் இருந்து பின்வாங்காததால் மேத்யூஸ் Timed Out முறையில் வெளியேற்றப்பட்டார்.

சோதனை முறையில் அமல்!

இது விதிகளின் அடிப்படையில் கொடுக்கப்பட்ட அவுட்தான் என்றாலும் மேத்யூஸ் போன்ற அனுபவ வீரர்களுக்கே பெரியளவில் தெரியாமல் இருந்தது. இந்தச் சூழலில், வேகப்பந்துவீச்சாளர்களும் ஒரு ஓவரில் இருந்து அடுத்த ஓவர் வீசவதற்கு அதிக நேரம் எடுப்பதை தவிர்க்கும் வகையில் புதிய விதி கொண்டுவரப்பட உள்ளதாக ஐசிசி முடிவெடுத்துள்ளது. 

அதாவது, சர்வதேச ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் ஒரு ஓவரை வீசி முடித்த பின்னர், அடுத்த ஓவரின் முதல் பந்தை அடுத்த 60 வினாடிகளுக்குள் வீசியாக வேண்டும். இந்த நேர கட்டுப்பாட்டை மூன்று முறை தாண்டிவிட்டால் பேட்டிங் செய்யும் அணிக்கு கூடுதலாக 5 ரன்கள் பெனால்டியாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்த விதியை வரும் டிசம்பர் மாதத்தில் இருந்து 2024ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை சோதனை முறையில் அமல்படுத்த ஐசிசி அதன் செயற்குழு கூட்டத்தில் முடிவெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஐசிசி கூறுவது என்ன?

இதுகுறித்து ஐசிசி வெளியிட்ட அறிக்கையில், “2023ஆம் ஆண்டு டிசம்பர் முதல் 2024ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை சர்வதேச ஆடவர் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் சோதனை அடிப்படையில் நிறுத்தக் கடிகாரத்தை (Stop Clock) அறிமுகப்படுத்த தலைமை செயற்குழு ஒப்புக்கொண்டது. ஓவர்களுக்கு இடையில் எடுக்கும் நேரத்தைக் கட்டுப்படுத்த இந்த கடிகாரம் பயன்படுத்தப்படும். முந்தைய ஓவர் முடிந்த 60 வினாடிகளுக்குள் பந்துவீச்சு அணி அடுத்த ஓவரை வீசத் தயாராக இல்லை என்றால், இது ஒரு இன்னிங்ஸில் மூன்றாவது முறையாக நடக்கும் போது 5 ரன்கள் அபராதம் விதிக்கப்படும்.

பிட்ச் மற்றும் அவுட்ஃபீல்ட் கண்காணிப்பு விதிமுறைகளில் மாற்றங்களும் அங்கீகரிக்கப்பட்டன, இதில் ஒரு பிட்ச் மதிப்பிடப்படும் அளவுகோல்களை எளிமையாக்குதல் மற்றும் ஒரு மைதானத்தின் சர்வதேச அந்தஸ்து குறைபாட்டு புள்ளியில் (Demirit Points) ஐந்தில் இருந்து 6 டீமெரிட் புள்ளிகளாக ஐந்து ஆண்டுகளில் பெறும்போது, அந்த மைதானம் அதன் சர்வதேச அந்தஸ்தை இழக்கும்” என குறிப்பிட்டுள்ளது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.