“எக்ஸ் தளத்தின் விளம்பர வருவாய் காசா, இஸ்ரேல் மருத்துவமனைகளுக்கு வழங்கப்படும்” – எலான் மஸ்க்

புதுடெல்லி: “எக்ஸ் வலைதளத்தின் விளம்பர வருவாய் மற்றும் சந்தாதாரர்கள் மூலம் கிடைக்கும் வருமானத்தை, போரினால் பாதிக்கப்பட்ட இஸ்ரேல், காசா மருத்துவமனைகளுக்கு நன்கொடையாக வழங்கப்படும்” என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

காசாவில் இஸ்ரேல் நடத்தி வரும் போர் உலக அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. கடந்த அக்டோபர் மாதம் 7 ஆம் தேதி தொடங்கிய போருக்கு இன்னும் சுமூக முடிவு எட்டப்படவில்லை. பாலஸ்தீனத்தை சேர்ந்த ஹமாஸ் அமைப்பு தாக்குதலை தொடங்கியிருந்தாலும், இஸ்ரேல் போர் விதி மீறல்களில் ஈடுபட்டு வருவதாக மனித உரிமை ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர். இஸ்ரேல் மேற்கொண்டு வரும் தாக்குதலில் இதுவரை, 13,000க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இஸ்ரேலியர்கள் சுமார் 1,200 பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

பள்ளிகள் மருத்துவமனைகள், அகதிகள் முகாம் உள்ளிட்ட பகுதிகளில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருவது உலக நாடுகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த கொடூரப் போரால் தங்களது வாழ்வாதாரம், உடைமைகளை இழந்து சிக்கித் தவித்து வரும் மக்களுக்கு மருத்துவமனைகள்தான் அடைக்கலம் கொடுத்து வருகிறது. ஆனால் இஸ்ரேல் ராணுவம் அதையும் விட்டுவைக்கவில்லை.

இந்தச் சூழலில் (சனிக்கிழமை) இஸ்ரேல் ராணுவம் காசாவின் அல் ஷிபா மருத்துவமனையை காலி செய்ய உத்தரவிட்டது . அந்த மருத்துவமனையில் இருந்து 2500 பேர் வெளியேற்றப்பட்டனர். பொதுமக்கள், மருத்துவர்கள், நகரக்கூடிய நோயாளிகள் அப்புறப்படுத்தப்பட்டனர். இதனால் அங்கு இப்போது 32 கைக்குழந்தைகள் உள்பட 291 நோயாளிகள் தவித்து வருகின்றனர். இதனை மருத்துவமனையை ஆய்வு செய்த உலக சுகாதார அமைப்பின் தலைமையிலான ஐ.நா. குழு உறுதி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், எக்ஸ் நிறுவனத்தின் தலைவரும், உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க், “எக்ஸ் வலைதளத்தின் விளம்பர வருவாய் மற்றும் சந்தாதாரர்கள் மூலம் கிடைக்கும் அனைத்து வருமானத்தையும், போரினால் பாதிக்கப்பட்ட இஸ்ரேல், காசா மருத்துவமனைகளுக்கு நன்கொடையாக வழங்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார். பிணைக் கைதிகளை விடுவிக்க ஏதுவாக 4 நாட்களுக்கு போரை நிறுத்துவதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்துள்ளார் என்பது கவனிக்கத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.