`ஒரு மாநாட்டை எப்படி நடத்தக் கூடாது என்பதற்கு, அதிமுக-வின் மதுரை மாநாடுதான் உதாரணம்' – உதயநிதி சாடல்

சேலம், சீலநாயக்கன்பட்டி பகுதியில் மாவட்ட தி.மு.க இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில், தி.மு.க இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர், “பா.ஜ.க-வின் ஒன்பது ஆண்டுக்கால ஆட்சியில், பிரதமர் மோடி `மாற்றத்தைக் கொண்டுவருவேன்’ என்று கூறி, `இந்தியா’ என்ற பெயரை மட்டும் மாற்றி `பாரதம்’ என்று கொண்டுவந்திருக்கிறார். தி.மு.க இளைஞரணி மாநாட்டை வெற்றிகரமாக நடத்த வேண்டும். அதற்கு அடித்தளமாக அமைந்திருப்பது இளைஞர் அணிதான், தலைமை சொல்வதைச் செய்து காட்டுபவர்கள்தான் செயல்வீரர்கள்.

கூட்டம்

எனவே, இந்த மாநாட்டை வெற்றி மாநாடாக அமைத்துத்தருவது, உங்கள் கையில்தான் இருக்கிறது. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு மதுரையில் அ.தி.மு.க மாநாடு நடைபெற்றது. மாநாடு எப்படி நடக்கக் கூடாது என்பதற்கு எடுத்துக்காட்டான மாநாடாக அமைந்திருந்தது அது. அந்த மாநாட்டில் கட்சியின் கொள்கைகள் குறித்தும், தலைவர்களின் சிறப்புகள் குறித்தும் பெரிதாக விளக்கப்படவில்லை.

ஆனால், தி.மு.க இளைஞரணி மாநாட்டில், கட்சியின் கொள்கைகள், அவற்றின் வரலாறு கூறப்படும். குறிப்பாக தி.மு.க-வின் மூன்றாண்டுக்கால ஆட்சியில், தேர்தல் அறிக்கையில் சொன்னது மட்டுமல்லாமல், சொல்லாததையும் செய்து காட்டியிருக்கிறோம். அது குறித்து விளக்கப்படும்.

முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர் இருந்தவரைக்கும் நீட் தேர்வு தமிழ்நாட்டுக்குள் நுழையவில்லை. ஆனால், அவர்கள் இறந்த பிறகு பா.ஜ.க அடிமைகள் விட்டுக்கொடுத்துவிட்டனர். இதனால், நீட் தேர்வால் பல மாணவர்கள் உயிரிழந்திருக்கின்றனர். நீட் தேர்வுக்கு எதிராக இதுவரை 30 லட்சம் கையெழுத்துகள் பெறப்பட்டிருக்கும் நிலையில், மீதமுள்ள கையெழுத்துகளைப் பெற்று தி.மு.க இளைஞரணி மாநாட்டில், தமிழக முதல்வரிடம் ஒப்படைப்போம்.

கூட்டம்

தி.மு.க அமைச்சர்கள் வீட்டில் தொடர்ந்து அமலாக்கத்துறை, வருமான வரித்துறையினர் சோதனைகள் மேற்கொண்டுவருகிறார்கள். இந்தச் சோதனையைக் கண்டு தி.மு.க-வின் கிளைச் செயலாளர்கூட பயப்பட மாட்டார். தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, கருணாநிதி ஆகியோரின் கொள்கை வாரிசுகள் இளைஞர் அணியினர். எனவே, 2021-ல் எப்படி தமிழ்நாட்டில் அடிமைகளை விரட்டியடித்தோமோ, அது போன்று 2024-ம் ஆண்டு அடிமைகளின் எஜமானர்களை வீட்டுக்கு விரட்டியடிப்போம்” என்றார்.

இந்தச் செயல்வீரர்கள் கூட்டத்தில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்டச் செயலாளர்கள், தி.மு.க இளைஞரணியினர் எனத் திரளானோர் கலந்துகொண்டனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.