ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்துக்கு ஆதரவு அளிக்க வேண்டும்: அனைத்து கட்சிகளுக்கு ராம்நாத் கோவிந்த் வலியுறுத்தல்

ரே பரேலி: ‘‘நாட்டு நலன் கருதி ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்துக்கு அனைத்து கட்சிகளும் ஆதரவளிக்க வேண்டும்’’ என குடியரசு முன்னாள் தலைவர் ராம்நாத் கோவிந்த் கூறியுள்ளார்.

நாட்டில் மக்களவை தேர்தலையும், சட்டப்பேரவை தேர்தல்களையும் ஒரே நேரத்தில் நடத்த வேண்டும் என பிரதமர் மோடி பல ஆண்டுகளாக கூறி வருகிறார். இந்த நடைமுறையை நாட்டில் அமல்படுத்துவது குறித்து ஆராயவும், அனைத்து தரப்பினரின் கருத்துக்களையும் கேட்கவும், 8 உறுப்பினர்கள் கொண்ட குழு ஒன்றை,குடியரசு முன்னாள் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் மத்திய அரசு இந்தாண்டு தொடக் கத்தில் குழு அமைத்தது. இதன் முதல் கூட்டம் கடந்த செப்டம்பரில் நடைபெற்றது.

இதில் குழுவின் வழிமுறைகள் தெரிவிக்கப்பட்டு, மாநிலங்களில் ஆளும் கட்சிகள் உட்பட அனைத்து தரப்பினரிடமும், கருத்துக்களை கேட்க முடிவு செய்யப்பட்டது. இந்த குழு அரசியல் கட்சிகள் உட்பட பல தரப்பினரும் ஆலோசித்து கருத்துக்களை கேட்டு வருகிறது.

இந்நிலையில், உத்தர பிரதேசம் ரே பரேலியில் ராம்நாத் கோவிந்த் நேற்று முன்தினம் அளித்த பேட்டியில் கூறியதாவது:

ஒரே நேரத்தில் மக்களவை தேர்தலையும், சட்டப்பேரவை தேர்தலையும் நடத்தினால் அது நாட்டு நலனுக்கு நல்லது. இதனால் எந்த ஒரு குறிப்பிட்ட கட்சியும் பலனடைய போவதில்லை. அடிக்கடி தேர்தல் நடத்துவது மூலம் செலவிடப்படும் வருவாய் மிச்சம். அது வளர்ச்சி பணிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

அதனால் நாட்டு நலனுக்காக, ஒரே நேரத்தில் மக்களவை தேர்தலையும், சட்டப்பேரவை தேர்தலையும் நடத்துவதற்கு அனைத்து கட்சிகளும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என நான் கேட்டுக் கொள்கிறேன். இதனால் எந்த ஒரு கட்சிக்கும் எதுவும் கிடைக்கப்போவதில்லை. ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற பாரம்பரியத்தை நாட்டில் மீண்டும் கொண்டு வர வேண்டும் என நாடாளுமன்ற குழு, நிதி ஆயோக், தேர்தல் ஆணையம், உட்பட பல குழுக்கள் கூறியுள்ளன.

இதற்காகத்தான் என் தலைமையில் குழு ஒன்றை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. நாங்கள் மக்களிடம் கருத்துகள் கேட்டு, ஒரே நாடு, ஒரே தேர்தல் நடைமுறை நாட்டில் மீண்டும் எவ்வாறு அமல்படுத்துவது என்பதுகுறித்து மத்திய அரசுக்கு ஆலோ சனைகள் வழங்குவோம்.

பதிவு செய்யப்பட்ட அனைத்து தேசிய கட்சிகளையும் நான் தொடர்பு கொண்டு அவர்களின் ஆலோசனைகளை கேட்டு வருகிறேன். நாட்டு நலனுக்காக இதற்கு, அனைத்து கட்சிகளும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

ஒரே நாடு, ஒரே தேர்தல் நடை முறையால் எந்த ஒரு கட்சியும் பலனடைய போவதில்லை. இதை அமல்படுத்தினால், எந்த கட்சி மத்தியில் ஆட்சியில் இருந்தாலும் பயனடையும். அது பாஜக., அல்லது் காங்கிரஸ் அல்லது எந்த கட்சியாகவும் இருக்கலாம். அதில் வேறுபாடு இல்லை.

ஒரே நேரத்தில் மக்களவை, சட்டப்பேரவை தேர்தல் முறையால் அதிகம் பயனடைய போவது மக்கள்தான். வருவாயை சேமித்து வளர்ச்சி பணிகளுக்கு பயன்படுத்த முடியும்.

இவ்வாறு ராம்நாத் கோவிந்த் கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.