புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே காலாடிப்பட்டியில் மாற்றுக் கட்சியிலிருந்து விலகியவர்கள் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி முதல் நாள் நடைபெற்ற நிலையில், அதே இடத்தில் மாற்றுக் கட்சியிலிருந்து விலகியவர்கள் திமுகவில் இணையும் நிகழ்ச்சி மறுநாள் நடைபெற்றது.
விராலிமலை சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட அன்னவாசல் அருகே காலாடிப்பட்டியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் மாற்றுக் கட்சிகளில் இருந்து விலகியவர்கள், முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் முன்னிலையில் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி கடந்த 19-ம் தேதி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

கட்சியில் இருந்து விலகி, அதிமுகவில் இணைந்தவர்களை
வரவேற்ற முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் .
இதைத் தொடர்ந்து, அதே இடத்தில் மாற்றுக் கட்சிகளில் இருந்து விலகியவர்கள் திமுகவில் இணையும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் (நவ.20) நடைபெற்றது. திமுக வடக்கு மாவட்டச் செயலாளர் கே.கே.செல்லபாண்டியன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி திமுகவில் இணைந்தவர்களை சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி வரவேற்றுப் பேசினார். அன்னவாசல் தெற்கு ஒன்றியச் செயலாளர் கே.எஸ்.சந்திரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இவ்வாறு ஒரே இடத்தில் முந்தைய நாள் அதிமுக இணைப்பு விழா நடத்திய நிலையில், மறுநாள் திமுக இணைப்பு விழா நடத்தியது அரசியல் வட்டாரத்தில் விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும், அடுத்த கட்டமாக அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி முன்னிலையில் மாற்றுக் கட்சியினரை அதிமுகவில் இணைப்பது குறித்து காலாடிப்பட்டி மண்டபத்தில் ஆலோசனைக் கூட்டம் நடத்த அதிமுகவினர் ஆயத்தமாகி வருவது குறிப்பிடத்தக்கது.