சுபமுகூர்த்த தினம்: சார்பதிவாளர் அலுவலகங்களில்  நாளை பத்திரப் பதிவுக்கு கூடுதல் டோக்கன்கள் ஒதுக்கீடு

சென்னை: பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று சுபமுகூர்த்த தினமான நாளை (நவ.23) பொதுமக்கள் பயன் பெறும் வகையில் அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலாளர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் சுபமுகூர்த்த தினங்களில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ஆவணப் பதிவுக்காக கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கீடு செய்வது வழக்கம். அந்த வகையில், சுபமுகூர்த்த தினமாக கருதப்படும் எதிர்வரும் 23.11.23 அன்று அதிகளவில் பத்திரப் பதிவுகள் நிகழும் என எதிர்பார்க்கப்படுவதால், அன்றைய தினம் கூடுதலாக முன்பதிவு டோக்கன்கள் வழங்கப்பட வேண்டும் என பதிவுத்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், ஒரு சார் பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100க்கு பதிலாக 150 முன்பதிவு டோக்கன்களும், இரண்டு சார் பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களுக்கு 200க்குப் பதிலாக 300 முன்பதிவு டோக்கன்களும், அதிகளவில் ஆவணப்பதிவுகள் நடைபெறும் 100 அலுவலகங்களுக்கு 100க்குப் பதிலாக 150 சாதாரண முன்பதிவு டோக்கன்களோடு, ஏற்கெனவே வழங்கப்படும் 12 தட்கல் முன்பதிவு டோக்கன்களுக்கு கூடுதலாக நான்கு தட்கல் முன்பதிவு டோக்கன்களும் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக வழங்கப்படும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.