புதுச்சேரி அ.தி.மு.கவின் மாநில செயலாளர் அன்பழகன், காவல்துறை டி.ஜி.பியை சந்தித்து புகார் மனு ஒன்றை அளித்திருக்கிறார். அந்த மனுவில், “`புதுச்சேரி பெரிய கலாப்பட்டில் சோலாரா’ ஆக்டிவ் பார்மா சயின்ஸ் லிமிடெட்’ எனப்படும் ரசாயனத் தொழிற்சாலை இயங்கி வருவதை நீங்கள் அறிவீர்கள், இந்த தொழிற்சாலை முன்பு சாசன் கெமிக்கல்ஸ் லிமிடெட் என்று அழைக்கப்பட்டது. இந்த தொழிற்சாலையில் உரிய பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எதுவும் பின்பற்றப்படவில்லை. அதன் விளைவாகவே அந்த தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 15 பேர், 50 சதவிகிதத்துக்கும் அதிகமான தீக்காயங்களுக்கு ஆளாகியுள்ளனர். தொழிற்சாலை நிர்வாகம், அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்த உண்மைகளை மறைக்கிறது. ஏற்கனவே நெடுஞ்செழியன் என்ற தொழிலாளி உயிரிழந்தார். அவரது உடல் இந்திராகாந்தி அரசு பொது மருத்துவமனையில் (IGMC & RI), உடற்கூராய்வு செய்யப்பட்டது.

இது பற்றிய விவரங்கள் உறவினர்களுக்கு தெரிவிக்கவில்லை. தற்போது யுவராஜ் என்ற மற்றொரு ஊழியர் இரண்டு நாட்களுக்கு முன்பு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் காலமானார். அவரது உடல் புதுச்சேரிக்குக் கொண்டு வரப்படாமல், சென்னை ஸ்டான்லி மருத்துவமனையிலேயே உடற்கூராய்வு செய்யப்பட்டது. அவரது உடல் தகனம் செய்யப்பட்ட பின்னரே அவரது மரணம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அந்த தனியார் நிறுவனத்தின் அனைத்து நடவடிக்கைகளுக்கும், அரசும், காவல்துறை உள்ளிட்ட அதிகாரிகளும் மௌனம் காக்கிறார்களோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. மேலும் இவர்கள் தொழிற்சாலையின் சட்டவிரோத செயலுக்கு மறைமுகமாக ஆதரவளிப்பது போல் தெரிகிறது. தீ விபத்து ஏற்பட்டவுடன் காலாப்பட்டு காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது. அப்படி இருந்தும் தொழிற்சாலை நிர்வாகிகள் யார் மீதும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது வருத்தமளிக்கிறது.
அரசியல்வாதிகள், அதிகாரிகளின் அலட்சியத்தால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இரண்டு உயிர்களைக் கொன்று இருப்பது மட்டுமல்லாமல், 50-க்கும் மேற்பட்ட நபர்களை தீக்காயம் அடைய வைத்திருக்கிறது. தீ விபத்துக்கு காரணமானவர்கள் மீது இன்னும் ஒரு எஃப்.ஐ.ஆர் கூட பதிவு செய்யப்படவில்லை. மனித இழப்பு மற்றும் காயமடைந்த நபர்களைப் பற்றி, அரசாங்கமோ நிர்வாகமோ கவலைப்படவில்லை. புகார் அளித்தும் யாரும் கைது செய்யப்படவில்லை. வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. காலாப்பட்டு இன்ஸ்பெக்டரும், அதிகாரிகளும் மௌனப் பார்வையாளராக, சக்தி வாய்ந்த அரசியல்வாதிகளின் ஆலோசனையின்படி செயல்படுகிறார்கள். அந்த இன்ஸ்பெக்டர் என்ன நடவடிக்கைகள் எடுத்தார் என்பது குறித்து விசாரணை நடத்தி, அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். உயிரிழந்த யுவராஜ் என்ற ஊழியர் குழந்தை தொழிலாளி. அவருடைய பிறந்த தேதி 10-12-2006. உயிரிழந்த அன்று அவர் 16 வயது, 11 மாதம், 7 நாட்களை நிறைவு செய்தார். ஒரு வருடத்திற்கு முன்பு 15 வயதில் வேலைக்கு சேர்ந்திருக்கிறார்.
குழந்தை தொழிலாளர் சட்டம் 1986 இன் கீழ் 18 வயதுக்கு குறைவானவர்கள் குழந்தை தொழிலாளர்களாக எடுத்துகொள்ளப்படுவார்கள். நிலக்கரி சுரங்கம், உலோக தொழிற்சாலை, மருந்து தொழிற்சாலைகள் உள்ளிட்ட 65 தொழிற்சாலைகளில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களை மட்டுமே பணியில் அமர்த்த வேண்டும். 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களை பணியில் அமர்த்தினால் குழந்தை தொழிலாளர் சட்டம் 1986, பிரிவி 3 மற்றும் 3A-ன் படி அந்த தொழிற்சாலை உரிமையாளர் மீது 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும். SOLARA ஆக்டிவ் பார்மா சயின்ஸ் லிமிடெட்., தொழிற்சாலை அபாயகரமான இரசாயனத் தொழிற்சாலை என்பதால், 16 வயது சிறுவன் எப்படி நிர்வாகத்தால் பணியமர்த்தப்பட்டார் என்பது தெரியவில்லை. எனவே இதுதொடர்பாக தொழிற்சாலை நிர்வாகம் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று தெரிவித்திருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.