சென்னை: மனித உரிமை மீறலில் ஈடுபட்ட காவல் அதிகாரிகளுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் ஆலங்குளம் தாலுகாவை சேர்ந்தவர் மாரியம்மாள். இவர் தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: நான் கள்ளச்சாராயம் விற்பதாகக் கூறி 2019-ல் ஆலங்குளம் போலீஸார் எனது வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து சோதனை நடத்தினர். நான் அதுபோன்று எந்த செயலிலும் ஈடுபடவில்லை என தெரிவித்தபோதும் வீட்டில் இருந்த பொருட்களை தூக்கி எறிந்து சேதப்படுத்தினர். மருத்துவ செலவுக்காக வீட்டில் வைத்திருந்த ரூ.75 ஆயிரம் பணத்தை எடுத்துச் சென்றனர்.
பின்னர் என்னை வலுக்கட்டாயமாக காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று கீழே தள்ளி தகாத வார்த்தைகளால் திட்டி லத்தியால் தாக்கினர். இதில் வலிப்பு ஏற்பட்டு மயக்கம் அடைந்தேன். இதைத் தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 5 நாட்கள் சிகிச்சைக்கு பின்பு வீடு திரும்பினேன். என்னை தாக்கிய போலீஸார் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது. மனுவை விசாரித்த ஆணையத்தின் உறுப்பினர் வி.கண்ணதாசன் பிறப்பித்த உத்தரவில், “சாட்சியம் மற்றும் ஆவணங்களை வைத்து பார்க்கும்போது போலீஸார் மனுதாரரிடம் அநாகரீகமான முறையில் நடந்து கொண்டது தெரிகிறது.
இது மனித உரிமை மீறல் ஆகும். எனவே, மனுதாரருக்கு தமிழக அரசு இழப்பீடாக ரூ.1 லட்சம் வழங்க வேண்டும். இதில், ரூ.50 ஆயிரத்தை அப்போதைய ஆலங்குளம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஆனந்த குமாரிடம் இருந்தும், தலா ரூ.25 ஆயிரத்தை தலைமை காவலர்கள் ஜான்சன், சசிகுமார் ஆகியோரிடமும் இருந்தும் தமிழக அரசு வசூலித்துக் கொள்ளலாம். அவர்கள் 3 பேர் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க அரசுக்கு பரிந்துரைக்கப்படுகிறது” என்று உத்தரவிட்டுள்ளார்.