புதுடில்லி:ஆர்.ஆர்.டி.எஸ்., எனும், பிராந்திய விரைவு போக்குவரத்துத் திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்ய உச்ச நீதிமன்றம் ஒருவார கெடு விதித்துள்ளது.
தேசிய தலைநகர் பிராந்தியத்தின் போக்குவரத்து பிரச்னைகளுக்குத் தீர்வு காணும் விதமாக, ஆர்.ஆர்.டி.எஸ்., திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
முதற்கட்டமாக, உத்தர பிரதேசத்தின் மீரட் – டில்லி இடையே அதிவிரைவு ரயில் பாதை அமைக்கப்பட்டு வருகிறது.
இத்திட்டத்துக்கு மாநில ஆம் ஆத்மி அரசு நிதி வழங்க மறுப்பதாக புகார் எழுந்தது.
இந்த பிரச்னை உச்ச நீதிமன்றத்தின் கவனத்துக்குச் சென்றது. நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல், சுதன்ஷூ துலியா ஆகியோர் அடங்கிய அமர்வு, ஆர்.ஆர்.டி.எஸ்., திட்டம் குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பி, விளம்பரத்துக்காக மாநில அரசு செலவழித்த விபரங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது.
உச்ச நீதிமன்றத்தின் முந்தைய உத்தரவை மாநில அரசு செயல்படுத்தியதா என்பது குறித்து என்.சி.ஆர்.டி.சி., பதில் மனு தாக்கல் செய்தது. அதில், ‘மாநில அரசு இன்னும் நிதி ஒதுக்கீடு செய்யவில்லை’ என கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நேற்று முன்தினம் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:
ஆர்.ஆர்.டி.எஸ்., திட்டத்துக்கு நிதி ஒதுக்குவதாக அளித்த உறுதிமொழியை மீறியதற்காக டில்லி அரசை நீதிமன்றம் கண்டிக்கிறது.
மாநில அரசின் விளம்பர நோக்கங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை, ஆர்.ஆர்.டி.எஸ்., திட்டத்துக்கு ஒதுக்க உத்தரவிடுகிறோம்.
நிதியை மாற்றுவதற்கான இந்த உத்தரவு ஒருவாரம் நிறுத்திவைக்கப்படுகிறது. ஆர்.ஆர்.டி.எஸ்., திட்டத்துக்குத் தேவையான நிதியை மாநில அரசு ஒதுக்காவிடில் உச்ச நீதிமன்ற உத்தரவு அமலுக்கு வரும்.
(டில்லி அரசின் வழக்கறிஞரைப் பார்த்து) நீங்கள் ஏன், நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தவில்லை?
இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.
மாநில அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் மீனாட்சி அரோரா, ஒரு வார கால அவகாசம் கோரினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்