பெலகாவி, : குளிர்கால கூட்டத்தொடர் பெலகாவியில் நடக்கும் போது, அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் தங்குவதற்கு வசதியாக, சொகுசு ஹோட்டல் கட்ட, கர்நாடகா அரசு திட்டமிட்டு உள்ளது.
பெலகாவியின் பஸ்த்வாட்டில் சுவர்ண சவுதா உள்ளது. கர்நாடகா சட்டசபையின் குளிர்கால கூட்டத்தொடர், ஆண்டுதோறும் இங்கு நடக்கிறது. இந்த ஆண்டு குளிர்கால கூட்டத்தொடர், அடுத்த மாதம் 4ம் தேதி துவங்கி 15 ம் தேதி வரை நடக்க உள்ளது.
கூட்டத்தொடரில் பங்கேற்கும் முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், அரசு அதிகாரிகள், உதவியாளர்கள் தங்குவதற்கு, பெலகாவியில் உள்ள ஹோட்டல்களில் முன்பதிவு நடந்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் அறை முன்பதிவுக்கே, அரசு பணம் கோடிக்கணக்கில் செலவழிக்கப்பட்டு வருகிறது.
இந்த செலவை குறைக்கும் வகையில், சுவர்ண சவுதா அருகே, 10 ஏக்கர் நிலத்தில் 300 கோடி ரூபாய் செலவில், பிரமாண்ட சொகுசு ஹோட்டல் கட்டவும், ஹோட்டலை கட்டி முடித்த பின்னர், தனியாருக்கு 30 ஆண்டுகள் குத்தகைக்கு விடவும், அரசு முடிவு செய்து உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
ஹோட்டல் கட்டுவதற்கான இடத்தை அடையாளம் காணும் பணியில், பெலகாவி மாவட்ட நிர்வாகத்தினர் ஈடுபட்டு உள்ளனர். இந்த ஆண்டு வறட்சி நிலவுவதால், வீண் செலவை குறைக்கும் வகையில், குளிர்கால கூட்டத்தொடரில் பங்கேற்க வரும், அரசியல்வாதிகளை தங்கள் வீட்டிற்கு தங்க வைக்க முடிவு செய்து, கடந்த சில நாட்களுக்கு முன்பு 40 கிராம விவசாயிகள், தீர்மானம் நிறைவேற்றி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement