நடந்து முடிந்த உலகக்கோப்பைத் தொடரில் இந்திய அணி இறுதிப்போட்டியில் தோல்வியைத் தழுவி இருந்தாலும் அந்தத் தொடர் முழுவதும் 10 போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றி பெற்றிருந்தது.
இந்திய அணியின் பந்துவீச்சு சிறப்பாக இருந்தது. ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி ஆகியோர் தங்களது பந்து வீச்சில் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தியிருந்தனர். குறிப்பாக இந்த உலகக்கோப்பை தொடரில் 7 போட்டிகளில் விளையாடி 24 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் முகமது ஷமி மொத்தமாக உலகக்கோப்பை வரலாற்றில் 55 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார்.

ஆனால், பாகிஸ்தானைச் சேர்ந்த முன்னாள் வீரர் ஹசன் ராஸா பிசிசிஐ அவர்களுக்குத் தேவையான ஸ்பெஷல் பந்துகளை ஐசிசி-யைக் கட்டாயப்படுத்தி வாங்குகிறது. அதனால்தான் இந்திய அணியின் பந்துவீச்சு சிறப்பாக இருக்கிறது என்று விமர்சனம் செய்திருந்தார். தொடர்ந்து இந்திய அணியையும், பௌலர்களையும் அவர் விமர்சித்து வந்த நிலையில் அதற்கு முகமது ஷமி பதிலடியைக் கொடுத்திருக்கிறார்.
இந்நிலையில் சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்ட ஷமியிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது. அதற்குப் பதிலளித்த ஷமி, “நான் யாரையும் பார்த்துப் பொறாமைப்படுவதில்லை. மற்றவர்களின் வெற்றியைக் கொண்டாடினால்தான் சிறந்த வீரராக இருக்க முடியும். இந்தத் தொடரில் பல விக்கெட்டுகளை நான் வீழ்த்தியிருந்தேன். இது பலருக்கும் ஆச்சரியமளித்திருக்கும். ஆனால் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர், இந்திய அணி வீரர்களுக்கு மட்டும் பந்தை மாற்றுகிறார்கள் என்று வித்தியாசமான குற்றச்சாட்டை முன் வைத்திருந்தார்.
Mohammad Shami thrashed Hasan Raza’s theory of different balls provided by ICC to Indians.pic.twitter.com/c6StMTRTCb
— Cricketopia (@CricketopiaCom) November 21, 2023
இந்திய பௌலர்களின் மிகச்சிறப்பான பந்துவீச்சை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. சர்ச்சையை உருவாக்க நினைத்தார்கள். ஆனால் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான வாசிம் அக்ரம், ஹசன் ராஸாவிற்குச் சிறந்த அறிவுரையை வழங்கியிருந்தார். அவர்களை நினைத்தால் எனக்குச் சிரிப்புதான் வருகிறது. இப்படியெல்லாம் கிரிக்கெட்டில் நடக்க வாய்ப்பே இல்லை!” என்று கூறியிருக்கிறார்.
ஷமியின் இந்தப் பேச்சு இணையத்தில் வைரலாகி வருகிறது.