தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களில், வடகிழக்குப் பருவமழை கடந்த ஒருவாரத்துக்கும் மேலாகப் பரவலாகப் பெய்துவருகிறது. இந்த நிலையில் தமிழ்நாடு, புதுச்சேரி ஆகிய பகுதிகளில் இன்று முதல் அடுத்த மூன்று நாள்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என்றும், அதற்கடுத்த நான்கு நாள்கள் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், `தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டியிருக்கும் பகுதிகளில் 26-ம் தேதி வாக்கில் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும். இது மேற்கு – வட மேற்கு திசையில் நகர்ந்து, காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, 27-ம் தேதி வாக்கில் தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் கடல் பகுதிகளில் நிலவுக்கூடும்.
இன்று (நவம்பர் 22) முதல் 24-ம் தேதிவரை தமிழ்நாட்டின் அநேக இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். குறிப்பாக, நீலகிரி, கோயம்புத்தூர், தேனி திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும், ஈரோடு, திருப்பூர் மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் ஆகிய மாவட்டங்கள் மற்றும் காரைக்காலின் ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பிருக்கிறது. 25-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை புறநகர்ப் பகுதிகளைப் பொறுத்தவரையில், அடுத்த 24 மணிநேரத்துக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதுடன், நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன்கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்ஸியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்ஸியஸாகவும் இருக்கும். அடுத்த 48 மணிநேரத்தைப் பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடனும், ஒருசில இடங்களில் இடி மின்னலுடன்கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்ஸியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 – 26 டிகிரி செல்ஸியஸாகவும் இருக்கும்.

அதேபோல், தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக் கடல் பகுதிகளில் இன்று சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 45 கி.மீ வேகத்திலும், இடையிடையே 55 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும். நாளை, தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 45 கி.மீ வேகத்திலும், இடையிடையே 55 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும். 26-ம் தேதி தெற்கு மற்றும் அதனை ஒட்டியிருக்கும் வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கி.மீ வேகத்திலும், இடையிடையே 55 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும். இந்த நாள்களில் மீனவர்கள் யாரும் அந்தப் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்றும், ஆழ்கடலில் இருக்கும் மீனவர்கள் 26-ம் தேதிக்குள் கரைக்குத் திரும்புமாறும் அறிவுறுத்தப்படுகிறது’ என்று முன்னெச்சரிக்கையாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.