இந்திய அணியின் அடுத்த பயிற்சியாளர் இவரா? டிராவிட் விருப்பம் இதுதான் – பிசிசிஐயின் முடிவு என்ன?

India National Cricket Team: ஐசிசி ஆடவர் உலகக் கோப்பை தொடர் (ICC World Cup 2023) சில தினங்களுக்கு முன் நடைபெற்று முடிந்த நிலையில், இந்திய அணி வெள்ளை பந்து கிரிக்கெட்டில் பெரிய மாற்றத்தையும், சீர்த்திருத்தை எதிர்கொள்ள காத்திருக்கிறது எனலாம். வீரர்கள் மாற்றம், அணுகுமுறை மாற்றம் என பல தளத்தில் இந்த மாற்றங்கள் நிகழ வாய்ப்பிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

குறிப்பாக, அடுத்தாண்டு ஐசிசி டி20 உலகக் கோப்பை (ICC T20 World Cup 2024) மற்றும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி (ICC Champions Trophy 2025) தொடர்களும் நடைபெற உள்ளதால் கடந்த 10 ஆண்டுகளாக நீடித்து வரும் ஐசிசி உலகக் கோப்பை தாகத்தை தீர்க்க பல முயற்சிகளை பிசிசிஐ முன்னெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

லஷ்மணுக்கு வாய்ப்பு?

இதில் முக்கியமான ஒரு விஷயம் என்னவென்றால் கடந்த நவ.19ஆம் தேதி அதாவது உலகக் கோப்பை இறுதிப்போட்டி நடைபெற்ற அன்றைய இரவே ராகுல் டிராவிட்டின் தலைமை பயிற்சியாளர் பதவி காலம் நிறைவடைந்துவிட்டது. எனவே, இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட்டின் ஒப்பந்தம் நீட்டிக்கப்படுமா அல்லது அவருக்கு பதில் வேறொருவரை பிசிசிஐ நியமிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 

குறிப்பாக, இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக சேவாக், ஆஷிஷ் நெஹ்ரா, டாம் மூடி, ஸ்டீபன் பிளேமிங் உள்ளிட்டோருக்கு வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், ராகுல் டிராவிட் தனது தலைமை பயிற்சியாளர் ஒப்பந்தத்தை நீட்டிக்க விரும்பவில்லை எனவும், அவருக்கு பதில் தற்போது தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக உள்ள விவிஎஸ் லஷ்மண் தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்பார் என பிசிசிஐ தரப்பில் தகவல்கள் வெளியாகி உள்ளன. 

லஷ்மண் தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக மட்டுமில்லாமல் இடைக்கால பயிற்சியாளராகவும் செயல்படுகிறார். இவரின் தலைமையில்தான் தற்போதைய இந்தியா – ஆஸ்திரேலிாயா டி20 தொடர் நடைபெற உள்ளது. கடந்த மாதம் சீனாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டிகளின் கிரிக்கெட்டில் இந்திய அணி தங்கம் வென்றிருந்தது, அந்த அணிக்கும் இவர்தான் தலைமை பயிற்சியாளராக சென்றிருந்தார்.

எப்போது முதல் லஷ்மண்?

எனவே, பிசிசிஐ முன்னாள் வெளிநாட்டு வீரர்களையோ அல்லது நிர்வாகத்தில் இதுவரை இல்லாத இந்திய மூத்த வீரர்களையோ சேர்ப்பதற்கு பதில் தற்போதைய வீரர்களுடன் நன்கு பரிட்சையப்பட்ட லஷ்மணையே தலைமை பயிற்சியாளராக நியமிக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 

மேலும் தனியார் ஊடகத்திடம் பிசிசிஐ தரப்பில் ஒருவர் அளித்த தகவலில்,”லக்ஷ்மண் தலைமை பயிற்சியாளர்களான தனது ஆர்வத்தை வெளிப்படுத்தி உள்ளார். உலகக் கோப்பையின் போது, லக்ஷ்மண் இதுதொடர்பாக பிசிசிஐயின் உயர்மட்ட அதிகாரிகளை அகமதாபாத்தில் சந்திக்க சென்றார். அவர் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் என்ற நீண்ட கால ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார், மேலும் வரவிருக்கும் தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்தில் முழுநேர இந்திய தலைமை பயிற்சியாளராக நிச்சயமாக அணியுடன் பயணம் செய்வார்” என தெரிவித்துள்ளார்.

டிராவிட் சொன்னது என்ன?

ராகுல் டிராவிட் தேசிய கிரிகெட்ட அகாடமியின் தலைவராக தொடர விரும்புவதாகவும், அது அவரின் சொந்த ஊரான பெங்களூருவிலேயே இருப்பதால் பணியில் நன்றாக இருக்கும் என்றும் அவர் பிசிசிஐயிடம் தெரிவித்துள்ளதாக கூறியுள்ளார். 

இருப்பினும், ராகுல் டிராவிட் ஒரு ஐபிஎல் அணியுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், இரண்டு வருடங்கள் அதில் பணியாற்றலாம் என்றும் மற்றொரு தகவல்கள் தெரிவிகின்றன. பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர், பந்துவீச்சு பயிற்சியாளர் பராஸ் மாம்ப்ரே மற்றும் பீல்டிங் பயிற்சியாளர் திலீப் ஆகியோருக்கு அணியில் என்ன எதிர்காலம் என்பதும் இதுவரை தெரியவில்லை. புதிய பயிற்சியாளர் அவர்களுடன் இணைந்து பணியாற்ற விரும்பலாம் அல்லது அவருடன் தனது சொந்த நபர்களை அழைத்து வரலாம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.