சினிமா வாய்ப்பு தருவதாக போலிகள் உலா வருகிறார்கள்: நடிகை நிரஞ்சனி பரபரப்பு பேச்சு

ராஜசேகர் மற்றும் யுவராஜ் கண்ணன் என்கிற இரட்டையர்கள் இணைந்து உருவாக்கி உள்ள படம் 'லாக்கர்'. நாராயணன் செல்வம் புரொடக்சன்ஸ் தயாரித்திருக்கிறது. இதில் கதாநாயகனாக விக்னேஷ் சண்முகம் நடித்துள்ளார். இவர் ஏற்கெனவே இறுதிப்பக்கம் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர். எதற்கும் துணிந்தவன், கேம் ஓவர் போன்ற படங்களில் வில்லனாகவும், மாஸ்டர் படத்தில் குணச்சித்திர வேடத்திலும் நடித்திருந்தார்.
கதாநாயகியாக அறிமுக நடிகை நிரஞ்சனி அசோகன் நடித்துள்ளார். இவர் சில குறும்படங்களிலும் ஆல்பங்களிலும் நடித்துள்ளார். வில்லனாக நிவாஸ் ஆதித்தன் நடித்துள்ளார்.

படத்தின் அறிமுக விழாவில் நாயகி நிரஞ்சனி அசோகன் பேசியதாவது: எனது குறும்படத்தைப் பார்த்து விட்டுதான் இந்த லாக்கர் பட வாய்ப்பு வந்தது. இன்ஸ்டாகிராம் மூலம் தொடர்பு கொண்டபோது முதலில் நான் நம்பவில்லை. ஏனென்றால் நிறைய போலிகள் உலா வருகிற காலம் இது. உண்மையாக இருக்குமா என்று நான் சந்தேகப்பட்டேன்.

அவர்களின் அலுவலகம் சென்றபோது எனக்கு இரண்டு விஷயங்கள் பிடித்தன. ஒன்று அவர்கள் கதை விவரித்த விதம் எனக்கு மிகவும் பிடித்தது. அவ்வளவு அருமையாக இருந்தது. அடுத்தது முதல் படத்திற்காக அவர்களது முன் தயாரிப்பு ஆச்சரியப்பட வைத்தது. எல்லாவற்றையும் தெளிவாகத் திட்டமிட்டு வைத்திருந்தார்கள். அதேபோல் தான் படப்பிடிப்பும் நடந்தது.

எல்லோருக்கும் முதல் படம் என்கிற போது ஒரு அழுத்தம் இருக்கும். அந்த அழுத்தம் தெரியாத அளவிற்கு அவர்கள் துல்லியமானத் திட்டத்துடன் இருந்தார்கள். இந்தப் படப்பிடிப்பில் சுற்றிலும் ஆண்கள் கூட்டம் இருக்கும். அப்படிப்பட்ட இடத்தில் நான் ஒருத்தி மட்டும்தான் பெண். இருந்தாலும் அந்த பாலினபேதம் ஏதும் உணரத் தோன்றாமல் சவுகரியமாக பாதுகாப்பாக உணர்ந்தேன். இப்படி ஒரு நல்லதொரு அனுபவம் இந்தப் படத்தின் மூலம் கிடைத்தது. அதை நினைத்து மகிழ்ச்சியாக இருக்கிறது. அனைவருமே நல்ல பங்களிப்பைக் கொடுத்துள்ளார்கள். என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.