நெல்லை மாநராட்சியில் 55 வார்டுகள் உள்ளன. இதில், 51 பேர் தி.மு.க மற்றும் அதன் கூட்டணிக்கட்சிக்களைச் சேர்ந்த கவுன்சிலர்கள். மாநகராட்சி மேயர் சரவணனுக்கும் தி.மு.க கவுன்சிலர்களுக்கும் இடையே ஆரம்பம் முதலே கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. மேயர் சரவணன் தன்னிசையாகச் செயல்படுவதாகவும், தங்கள் வார்டுகளில் நடக்கவேண்டிய பணிகளுக்கு டெண்டர் விடாமல், கோப்புகளைத் தனது மேஜையிலேயே வைத்துக்கொள்வதாகவும் புகார் எழுந்தது. இதற்கிடையே, மேயர் சரவணன் அதிக கமிஷன் கேட்பதாக மாநகராட்சி ஒப்பந்ததாரர் ஒருவரே ஆதாரத்துடன் ஆடியோ வெளியிட்டார்.

மாநகராட்சி ஒப்பந்தங்களில் 20 முதல் 25 சதவிகிதம் கமிஷன் கேட்பதாகவும் சரவணன்மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். ஆனால், அதில் உண்மையில்லை, அனைத்தும் தவறான ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகள் என மறுத்துவந்தார் சரவணன். மாநகராட்சி ஒப்பந்தங்களில் கமிஷன் வாங்குவது தொடர்பாக மேயர் சரவணன் மற்றும் பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினரும், அப்போதைய மத்திய மாவட்டச் செயலாளராகவும் இருந்த அப்துல் வஹாப்புடன் மோதல் ஏற்பட்டதாகப் பரபரப்பாகப் பேசப்பட்ட நிலையில், இது தொடர்பாக நடத்திய கட்சித் தலைமை அப்துல் வஹாப்பின் பதவியைப் பறித்தது.
அதன் பின்னரும் மாநகராட்சியில் அமைதி நிலவவில்லை. தொடர்ந்தும் மேயருக்கு எதிராகப் புகார்கள் எழுந்தவண்ணம் இருந்தன. கவுன்சிலர்கள் பலரும் நேருக்கு நேராகக் கேள்விகளை எழுப்புவதால், பல நேரங்களில் தீர்மானங்களை நிறைவேற்ற முடியாமல் ஒத்திவைக்கவேண்டிய சூழல் ஏற்பட்டது. இந்த நிலையில், 40-க்கும் அதிகமான கவுன்சிலர்கள் கையெழுத்திட்டு கட்சித் தலைமைக்குப் புகார் மனு அனுப்பினர்.

இதில், பெரும்பான்மையான உறுப்பினர்கள் முன்வைக்கும் கோரிக்கைகளை மேயர் சரவணன் நிறைவேற்றி தருவதில்லை என ஆளுங்கட்சியை சேர்ந்த கவுன்சிலர்களே தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர். அத்துடன், அடிக்கடி மாமன்ற கூட்டங்களில் மேயருக்கு எதிராக ஆளுங்கட்சி கவுன்சிலர்களே தர்ணா போராட்டத்தில் ஈடுபடுவதும், ஊழல் குற்றச்சாட்டை முன்வைப்பதும் தொடர்கதையாகிறது. இதனால், மேயர் மற்றும் கவுன்சிலர்களுக்கு இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது.
கடந்த 21-ம் தேதி மாநகராட்சியில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர் முகாமில் மனு கொடுப்பதற்காக ஆளும் கட்சி கவுன்சிலர்கள் 20 பேர் வந்திருந்தனர். ஆனால், முகாமில் மேயர், துணை மேயர் மற்றும் மாநகராட்சி ஆணையர் இல்லாததால் ஆத்திரமடைந்த கவுன்சிலர்கள் மனுவுடன் மாநகராட்சி அலுவலக வாசலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். குடிநீர், சாலை உட்பட அடிப்படை பிரச்னைகளை தீர்ப்பதற்கு மேயர் முன்னுரிமை கொடுப்பதில்லை என போராட்டத்தில் ஈடுபட்ட கவுன்சிலர்கள் குற்றம் சாட்டினர். அத்துடன், அவர் மீது முறைகேடு புகார்களையும் அடுக்கினர். இந்த நிலையில்தான், 6வது வார்டு உறுப்பினர் பவுல்ராஜ், 20வது வார்டு உறுப்பினர் மன்சூர், 24வது வார்டு உறுப்பினர் ரவீந்தர் மற்றும் மாநகர பிரதிநிதி சுண்ணாம்பு மணி ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்சி கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையிலும் செயல்பட்டதால் அந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இவர்கள் மேயருக்கு எதிரான போராட்டங்களுக்கு மற்ற கவுன்சிலர்களை மறைமுகமாக தூண்டிவிட்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்கிறார்கள் கட்சி நிர்வாகிகள். இதனால், மேயருக்கு எதிரான மற்ற கவுன்சிலர்களும் கலக்கத்தில் உள்ளனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.