மறைந்தார் ஃபாத்திமா பீவி: உச்ச நீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதி, ஆளுநர்… தடம் பதித்த சாதனை பெண்!

தமிழ்நாட்டின் ஆளுநராகப் பணியாற்றிய இந்திய உச்ச நீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதி ஃபாத்திமா பீவி, தன்னுடைய 96 வயதில் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். இவர் இந்திய உச்ச நீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதி மட்டுமல்லாது, ஆசியாவிலேயே உச்ச நீதிமன்ற முதல் பெண் நீதிபதியும் ஆவார். மேலும், உயர் நீதிமன்ற அளவிலும் முதன்முதலாக நியமிக்கப்பட்ட இஸ்லாமியப் பெண் நீதிபதியும் இவரே. நீதித்துறை மட்டுமல்லாமல், தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் உறுப்பினர், ஆளுநர் என பல்வேறு பதவிகளில் பொறுப்பு வகித்து பெண்களுக்கான அதிகாரத்தில் முன்னோடியாகத் திகழும் ஃபாத்திமா பீவி குறித்து பார்க்கலாம்…

ஃபாத்திமா பீவி

யார் இந்த ஃபாத்திமா பீவி?!

இந்தியா சுதந்திரமடைவதற்கு முன்னர், 1927, ஏப்ரல் 30-ம் தேதி அப்போதிருந்த திருவிதாங்கூர் சமஸ்தானத்தில், பத்தனம்திட்டா என்ற ஊரில், அன்னவீட்டில் மீரா சாஹிபுக்கும் கதீஜா பீவிக்கும் மகளாகப் பிறந்தார் ஃபாத்திமா பீவி. தனது சொந்த ஊரிலேயே கத்தோலிக்கப் பள்ளியில் 1943-ல் உயர்நிலைக் கல்வி முடித்த ஃபாத்திமா பீவி, திருவனந்தபுரம் பல்கலைக்கழக கல்லூரியில் வேதியியலில் இளங்கலைப் பட்டமும், அதைத்தொடர்ந்து திருவனந்தபுரம் அரசு சட்டக் கல்லூரியில் சட்டப் படிப்பில் இளங்கலைப் பட்டமும் என 1949-ல் கல்லூரிப் படிப்பை முடித்தார்.

நீதிபதியாகும் கனவுடன் வழக்கறிஞர் பணி!

இந்தியாவின் முதல் பெண் நீதிபதியும், உயர் நீதிமன்ற அளவில் முதல் பெண் நீதிபதியுமான அன்னா சாண்டியின், “நீ எம்.எஸ்ஸி பட்டம் பெற்றால் கல்லூரியில் விரிவுரையாளராகவோ, பள்ளியில் ஆசிரியராகவோதான் பணியாற்ற முடியும். நீ வாழ்க்கை முழுக்க திருவனந்தபுரத்தில்தான் கழிக்க வேண்டும். அதனால் ஒரு பயனும் இல்லை. அதற்குப் பதிலாக நீ சட்டக்கல்லூரியில் சேரலாம்” என்ற அறிவுரையைப் பெற்ற ஃபாத்திமா பீவி அவரையே தனக்கான ரோல் மாடலாக ஏற்றுக்கொண்டு, சட்டப் படிப்பை முடித்து 1950-ல் எர்ணாகுளத்தில் இந்திய பார் கவுன்சில் தேர்வெழுதினார்.

ஃபாத்திமா பீவி

அதோடு நிற்காமல், திருவிதாங்கூர் சமஸ்தான பார் கவுன்சில் தேர்வில் முதலிடம் பெற்ற முதல் பெண்மணி என்று தங்கப் பதக்கத்துடன் இந்திய நீதித்துறை பக்கங்களில் தன்னுடைய பெயரைப் பதியவைக்கத் தயாராகிவிட்டார். அந்த ஆண்டே, நவம்பர் 24-ம் தேதி இந்திய பார் கவுன்சிலில் தன்னை வழக்கறிஞராகப் பதிவுசெய்த ஃபாத்திமா பீவி, கொல்லம் நீதிமன்றத்தில் ஏழு ஆண்டுகள் வழக்கறிஞராகப் பணியாற்றினார்.

ஆசியாவின் முதல் உச்ச நீதிமன்ற பெண் நீதிபதி ஃபாத்திமா பீவி!

1958-ல் கேரள துணை நீதித்துறை சேவைகளில் முன்சிஃப்-ஆக நியமிக்கப்பட்ட ஃபாத்திமா பீவி, அடுத்த 10 ஆண்டுகளுக்குப் பிறகு 1968-ல் துணை நீதிபதியாகப் பதவி உயர்த்தப்பட்டார். அதைத்தொடர்ந்து 1972-ல் தலைமை நீதித்துறை மாஜிஸ்திரேட்டாகவும், 1974-ல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதியாகவும் தனது பணியில் தொடர்ந்து முன்னேறினார். பின்னர், 1980-ல் வருமான வரி மேல்முறையீட்டுத் தீர்ப்பாயத்தின் நீதித்துறை உறுப்பினராக பணியமர்த்தப்பட்ட ஃபாத்திமா பீவி, 1983 ஆகஸ்ட் 4-ம் தேதி உயர் நீதிமன்ற நீதிபதியானார்.

ஃபாத்திமா பீவி

ஆறு ஆண்டுகள் உயர் நீதிமன்ற நீதிபதியாக செயல்பட்டு வந்த ஃபாத்திமா பீவி, 1989 ஏப்ரல் 29-ம் தேதி உயர் நீதிமன்ற நீதிபதியாக ஓய்வுபெற்றார். இருப்பினும் அடுத்த ஆறு மாதங்களுக்குப் பிறகு 1989 அக்டோபர் 6-ம் தேதி இந்திய உச்ச நீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதியாக நியமிக்கப்பட்டார் ஃபாத்திமா பீவி. இதன் மூலம் ஆசியாவின் முதல் உச்ச நீதிமன்ற பெண் நீதிபதி என்ற பெருமைக்கும் சொந்தக்காரரானார் ஃபாத்திமா பீவி. இதுமட்டுமல்லாமல், உயர் நீதிமன்றங்களில் பணியமர்த்தப்பட்ட முதல் இஸ்லாமியப் பெண் நீதிபதி என்ற பெருமைக்கும் இவரே சொந்தக்காரர்.

தமிழ்நாட்டின் ஆளுநர் ஃபாத்திமா பீவி!

1992 ஏப்ரல் 29-ல் உச்ச நீதிமன்ற நீதிபதி பதிவிலிருந்து ஓய்வுபெற்ற ஃபாத்திமா பீவி, அதன்பிறகு தேசிய மனித உரிமை ஆணையத்தில் உறுப்பினராகவும், கேரள மாநில பிற்படுத்தப்பட்ட மக்கள்நல வாரியத்தின் உறுப்பினராகவும் தொடர்ந்து பணியாற்றி வந்தார். அதைத்தொடர்ந்து, 1995-ம் ஆண்டு குடியரசு தினத்துக்கு முந்தைய நாள் (ஜனவரி 25), அப்போதைய குடியரசுத் தலைவர் சங்கர் தயாள் சர்மா, தமிழ்நாட்டின் ஆளுநராக ஃபாத்திமா பீவியை நியமனம் செய்தார்.

இதன் மூலம் தமிழ்நாட்டின் முதல் பெண் ஆளுநர் என்று வரலாற்றில் தன் பெயரை பதித்தார். 2001-ல் அரசியல் சர்ச்சைகளுக்குப் பின்னால் தாமாக முன்வந்து ஆளுநர் பதவியை ராஜினாமா செய்த ஃபாத்திமா பீவி, தன்னுடைய பதவிக் காலத்தில், மறைந்த முன்னாள் முதல்வர்கள் கருணாநிதிக்கு ஜெயலலிதா ஆகிய இருவரையும் கண்டார்.

1990-ல் கௌரவ டி.லிட் பட்டம், மஹிலா சிரோமணி விருது பெற்ற ஃபாத்திமா பீவி, பாரத் ஜோதி விருது, யு.எஸ்-இந்தியா பிசினஸ் கவுன்சில் (USIBC) வாழ்நாள் சாதனையாளர் விருது ஆகியவற்றையும் பெற்றிருக்கிறார். 2002-ல், குடியரசுத் தலைவர் தேர்தலில் என்.டி.ஏ கூட்டணி ஃபாத்திமா பீவியின் பெயரையும் பரிசீலித்ததாகக் கூறப்படுகிறது.

ஃபாத்திமா பீவி

நீதித்துறையில் தடம் பதிக்க வேண்டும் என்ற லட்சியத்துடன் தனது கனவைத் துரத்திப் பிடித்த ஃபாத்திமா பீவியின் வாழ்க்கை, அவர் இறந்தபின்பும் அடுத்துவரும் பெண் தலைமுறையினருக்கு ஓர் உந்துசக்தியாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை!

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.