கோவில்பட்டி: விளாத்திகுளம் பகுதியில் காட்டுப் பன்றிகள் அட்டகாசத்தால் சுமார் 500 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த மக்காச்சோளம், நிலக்கடலை பயிர்கள் சேதமடைந்துவிட்டன. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். விளாத்திகுளம், எட்டயபுரம், புதூர் பகுதிகளில் உள்ள மானாவாரி நிலங்களில் இந்தாண்டு ராபி பருவத்தில் மக்காச்சோளம், நிலக்கடலை, உளுந்து, பாசி, சோளம், கம்பு, வெங்காயம் உள்ளிட்டவைகளை பயிர் செய்துள்ளனர். இந்நிலையில், இந்தாண்டும் காட்டுப்பன்றிகள் அட்டகாசத்தால் ராசாபட்டி உள்ளிட்ட பகுதிகளில் பயிரிடப்பட்ட சுமார் 500 ஏக்கர் பரப்பளவிலான நிலக்கடலை பயிர்கள் சேதமடைந்துள்ளன. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது: கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக மானாவாரி நிலங்களில் பயிரிடப்படும் பயிர்களை காட்டுப்பன்றிகள், மான்கள் உள்ளிட்ட வனவிலங்கள் தின்று அழித்து வருகின்றன. இதனால் முறையாக மகசூல் எடுக்க முடியாமல் நஷ்டமடைந்து வருகிறோம். தற்போது காலம் தாழ்த்தி மழை பெய்து மகசூல் எடுக்க முடியாமல் செய்து வருகிறது. இதில், காட்டுப்பன்றிகள் அட்டகாசம் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது.
முத்துலாபுரம், தாப்பாத்தி, அழகாபுரி, அயன் கரிசல்குளம், ராசாபட்டி, கைலாசபுரம், மாசார்பட்டி, வெம்பூர், கீழக்கரந்தை உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 500 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நிலக்கடலைப் பயிர்களை மண்ணைத் தோண்டி எடுத்து தின்று அழித்துள்ளன. மக்காச்சோளப் பயிர்களையும் அழித்துள்ளன. விளாத்திகுளம் பகுதியில் மட்டும் சுமார் ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மக்காச்சோளம், நிலக்கடலை பயிர்களை காட்டுப்பன்றிகள் அழித்துள்ளன. காட்டுப்பன்றிகள் அட்டகாசம் குறித்து வனத்துறை, வேளாண் துறை முதல் ஆட்சியர் வரை பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதே நிலை நீடித்தால் விவசாயப் பரப்பளவு குறைந்துவிடும் என்பதில் ஐயமில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.