ராய்ச்சூர் : நிலக்கரி பற்றாக்குறையால், ஆர்.டி.பி.எஸ்., எனும் ராய்ச்சூர் அனல் உற்பத்தி நிலையம் உட்பட, மற்ற மின் உற்பத்தி நிலையங்கள் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியாமல் திணறுகின்றன. ஆனால், இங்கு வர வேண்டிய டன் கணக்கிலான நிலக்கரி, குறுக்கு வழியில் தனியாருக்கு விற்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ராய்ச்சூரின் ஆர்.டி.பி.எஸ்., மற்றும் ஒய்.டி.பி.எஸ்., எனும் யரமரஸ் அனல் மின் உற்பத்தி நிலையங்கள், கர்நாடகாவின் மொத்த மின் தேவையில், 40 சதவீதத்தை பூர்த்தி செய்கின்றன.
தற்போது நிலக்கரி பற்றாக்குறையால், இரண்டு நிலையங்களிலும், மின் உற்பத்தியில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. மாநிலத்தின் தேவைக்கு தகுந்தபடி மின்சாரம் வினியோகிக்க முடியாமல், கர்நாடக மின் ஒழுங்கு முறை ஆணையம் திண்டாடுகிறது.
இத்தகைய சூழ்நிலையில், டன் கணக்கில் நிலக்கரி குறுக்கு வழியில், தனியாருக்கு விற்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆர்.டி.பி.எஸ்., – ஒய்.டிபி.எஸ்., மின் உற்பத்தி நிலையங்களுக்கு வினியோகிக்கப்படும் நிலக்கரியை, சரியாக பயன்படுத்துவதில்லை.
ரயில் நிலையங்களின் அருகில் கண்ட, கண்ட இடங்களில் மலை போன்று குவித்து வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலக்கரி, ஒப்பந்ததாரர்கள் மூலமாக லாரிகள், டிராக்டர்களில் வேறு இடத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது. அப்போது வழியில், சிறிது சிறிதாக குறிப்பிட்ட இடத்தில் நிலக்கரியை கொட்டி செல்கின்றனர்.
இப்படி சேரும் நுாற்றுக்கணக்கான டன் நிலக்கரியை, தனியாருக்கு விற்பனை செய்கின்றனர். இந்த முறைகேடில், ஆர்.டி.பி.எஸ்., – ஒய்.டி.பி.எஸ்., அதிகாரிகள், ஊழியர்களுக்கு தொடர்புள்ளதாக கூறப்படுகிறது.
தரமான நிலக்கரியை, அனல் மின் உற்பத்தி நிலையங்களுக்கு பயன்படுத்தாமல், தனியாருக்கு விற்று லட்சக்கணக்கான ரூபாய் சம்பாதிக்கின்றனர். நிலக்கரி திருட்டை தீவிரமாக கருதிய, மின் துறை அமைச்சர் ஜார்ஜ், இதற்கு கடிவாளம் போட திட்டமிட்டுள்ளார். விசாரணைக்கு பின், நிலக்கரி திருட்டில் யார், யாருக்கு தொடர்புள்ளது என்பது தெரியும்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்