நடிப்பு, இசை என பல திறமைகளை இளைஞர்கள் வெளிப்படுத்துவதற்கு யூடியூப் உதவிக் கரம் நீட்டுகிறது. அதிலிருந்து பல இண்டிபெண்டன்ட் இசைக் கலைஞர்கள் சினிமாப் பக்கமும் நகர்ந்திருக்கிறார்கள்.
யூடியூப் பெரிதளவில் மக்களுக்குப் பரிச்சயமில்லாத காலத்திலிருந்து இண்டிபெண்டன்ட் இசைக் கலைஞராக இயங்கி வருகிறவர்தான், கேபர் வாசுகி. ‘ஏலே’, ‘தாராள பிரபு’ ஆகிய திரைப்படங்களின் இசையமைப்பாளர்களில் ஒருவராகப் பணியாற்றியவர் கவண், இரும்புத்திரை ஆகிய திரைப்படங்களில் பாடல்கள் பாடியிருக்கிறார். தற்போது வெளியாகியுள்ள ‘கேப்டன் மில்லர்’ திரைப்படத்தின் ‘கில்லர் கில்லர்’ பாடலை எழுதியவரும் இவர்தான். கனடாவில் இருக்கும் கேபர் வாசுகியைத் தொடர்புகொண்டு பேசினோம்.
உங்க பெயர் ரொம்பவே வித்தியாசமாக இருக்கே, இதுக்கு ஏதாவது காரணம் இருக்கா?
(சிரித்துக்கொண்டே) தன்னைத்தானே கலைஞனாக உணர்ந்த தருணம் மாதிரிதான். கலைஞனாக வரும்போது நான் யாரு, ஆணா, பெண்ணான்னு தெரியக் கூடாதுன்னு நினைச்சேன். இப்போ உதாரணத்துக்கு எழுத்தாளர் சுஜாதாவைப் பாருங்க. இப்போ இந்தப் பெயரைக் கேள்விப்படும்போது எல்லோரும் ஒரு பெண் எழுத்தாளர்னு நினைப்போம். அதே மாதிரிதான் என்னோட பெயர் என் பின்புலத்தை, அடையாளத்தை யூகிக்க முடியாத மாதிரி இருக்கணும்னு நினைச்சு வச்சேன். இந்த மாதிரியான சமயங்கள்ல நம்ம வொர்க்தான் அடையாளமாக மாறும். அப்போ, நிறைய பெயர்கள் யோசிச்சேன். ‘கேபர் வாசுகி’ங்கிற பெயர் கேட்கவே நல்ல இருந்தது. இந்தப் பெயரைக் கேட்கும்போதே எனக்குள்ள ஏதோ ஃபீல் ஆச்சு. அதான் இந்தப் பெயரை வச்சுக்கிட்டேன்.

மியூசிக், எப்படி உங்க வாழ்க்கைல வந்தது?
நான் நேரடியாக மியூசிக் பக்கம் வரல , எனக்கு நாவல், சிறுகதைகள் எழுதணும்னுதான் ரொம்ப ஆசை. அதுக்குப் பிறகு நடுவுல சில காலம் ஜர்னலிசம் பண்ணினேன். ஒரு புத்தகத்துக்குள்ள ஒரு முழு வாழ்க்கை அனுபவம் இருக்கும். அதை எழுதுறதுக்கான நேரம், மெனக்கெடல்னு எல்லாமே அதிகம். சரி, பாடலாக எழுதுவோம்னு நினைச்சு எழுதினேன். அதுக்கு கம்போஸர் கிடைக்கல. அதுக்கப்புறம் நானே கம்போஸ் பண்ணினேன். அந்தப் பாடலைப் பாடுறதுக்கு எனக்கு சிங்கர்ஸ் கிடைக்கல. அதுக்குப் பிறகு நானே பாடினேன். இப்படிதான் எல்லாம் ஆரம்பிச்சது. வாழ்க்கைதான் நம்மள அடுத்தடுத்த கட்டங்களுக்குக் கூட்டிட்டுப் போகும். இங்க பாடல்கள்னு எடுத்துக்கிட்டா சினிமாப் பாடல்களுக்குத்தான் ரொம்ப முக்கியத்துவம் இருக்கு. ஒரு சமயத்துல நாம இப்படி மியூசிக் பண்ணலாம்னு யோசிச்சு 2008-ல யூடியூப் சேனல் ஆரம்பிச்சுப் பாடல்கள் பண்ணினேன். நான் வர்ற சமயத்துல இண்டர்நெட்டே பெரிதளவுல பரிச்சயம் கிடையாது. இப்படித்தான் இசை என் வாழ்க்கைல வந்தது. இப்போ வரைக்கும் பல இண்டிபெண்டன்ட் பாடல்கள் பண்ணிட்டிருக்கேன். அந்த வரிசைல இப்போ சமீபத்துல நான் ‘பொய்’ ன்னு ஒரு ஆல்பம் நானே எழுதிப் பாடியிருக்கேன்.
உங்க பாடல்களோட மனிதர்களோட வலியைப் பேசுற மாதிரியும், மனிதர்களோட உளவியல் பிரச்னைகளைப் பேசுற மாதிரியான வடிவத்துல இருக்கே… இதுக்கு ஐடியா எப்படி வந்தது?
ஆமா… நான் பாடல்கள் எழுதத் தொடங்கின சமயத்துல என் நண்பர்கள் எல்லாம் லவ் பாடல்கள் பண்ணச் சொல்லிக் கேட்பாங்க. ஆனா, அது எனக்குக் கொஞ்சம் போரிங்காக இருந்துச்சு. கவிதை, கதை, பாடல்களெல்லாமே கேட்கிறவங்களுக்கு ஒரு ஆறுதல் கொடுக்கணும். இப்போ என்னோட பாடலை ஒருத்தர் கேட்கும்போது ‘நாம யோசிக்கிற மாதிரியே ஒருத்தன் யோசிச்சு எழுதியிருக்கான்’னு நினைப்பாங்க. அப்போ அவங்களுக்கு ஒரு ஆறுதல் கிடைக்கும். நான் எழுதுற பாட்டெல்லாம் யாராவது கேட்பாங்களான்னு ஒரு நம்பிக்கைகூட எனக்கு முதல்ல கிடையாது. அப்பவும், நான் எழுதுற பாடல்கள் எனக்குத் திருப்தியாக இருக்கணும், நான் எழுதுற பாடல்கள் என்னோட உளவியல் பிரச்னைகள்ல இருந்து எனக்கு விடுதலை கிடைக்கிற மாதிரி எழுதணும்னுதான் முடிவு பண்ணினேன். அதுக்கேத்த மாதிரி ஆடியன்ஸும் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிச்சாங்க. புதுசா ஒரு விஷயத்தைக் கொடுக்கணும் அப்படிங்கிற விஷயத்துல நான் ரொம்ப உறுதியாக இருந்தேன்.

‘கேப்டன் மில்லர்’ எப்படி அமைஞ்சது?
நான் இண்டிபெண்டன்ட் மியூசிக் பண்ணிட்டிருந்த சமயத்திலேயே எனக்கு இயக்குநர் அருண் மாதேஸ்வரன் பழக்கம். அவரோட தொடக்கக் காலத்துல இருந்தே எனக்கும் அவரைத் தெரியும். ராக்கி திரைப்படத்திலேயும் இரண்டு பாடல்கள், ஒரு கவிதை எழுதியிருந்தேன். எனக்கு அருண்கூட வேலை பார்க்கிறது ரொம்ப கம்ஃபோர்ட். இப்போ இவர் கேப்டன் மில்லர் திரைப்படம் பண்ணுறார்னு அறிவிப்பு வந்ததும் நமக்கு ஒரு வாய்ப்பு கிடைக்காதான்னு நினைச்சுட்டிருந்தேன். ஒரு நாள் அருணே என்கிட்ட ‘ஒரு பாட்டு பண்ணணும்’னு சொன்னாரு. அதுதான் நீங்க இப்போ கேட்குற ‘கில்லர் கில்லர்’ பாடல்.
ஒரு கதாபாத்திரத்தை விளக்குற மாதிரியான பாடல்கள் எழுதும் போது அந்தக் கதாபாத்திரத்தைப் பத்தி நாம தெரிஞ்சுக்கணும், அந்த வகையில ‘கேப்டன் மில்லர்’ எப்படிப்பட்டவர்?
அருண் மாதேஸ்வரன் எனக்குக் கதையோட அவுட்லைன் மட்டும் சொல்லுவார். அதை வச்சு அந்தப் பாட்டு வர்றப்போ அந்தக் கதாபாத்திரத்தோட மனநிலை என்னன்னு புரிஞ்சிப்பேன். அந்த இடத்துல இருக்கிற கதாபாத்திரத்தோட மனநிலையைப் பிரதிபலிக்கிற மாதிரிதான் பாடல் இருக்கணும்னுதான் டைரக்டர் என்கிட்ட கேட்டார். அருண் என்கிட்ட ‘இது வேணும், அது வேணும்’னு பெருசா கேட்கமாட்டார். திரைப்படத்தோட கதைச்சுருக்கத்தைச் சொல்லும்போதே அந்தப் படத்தோட தன்மையையும், மனநிலையையும் நம்மகிட்ட செட் பண்ணிடுவார். அவர் சொன்னத வச்சு பாடல் எழுதத் தொடங்கினா சரியா பண்ணிடலாம். அருண் சொன்ன பாயின்ட்ட வச்சுப் பார்க்கும்போது அந்தக் கதாபாத்திரம் ‘ கில்லர் கில்லர், கேப்டன் மில்லர்தான்!’

சினிமா பயணம் எப்போ தொடங்குச்சு?
2017-ல, கவண் திரைப்படம்தான் என்னோட சினிமா பயணத்தோட தொடக்கம். அந்தப் படத்துக்கு ஹிப் ஹாப் தமிழா இசையமைச்சிருந்தார். அவர் நிறைய இண்டிபெண்டன்ட் ஆர்ட்டிஸ்ட்களுக்கு வாய்ப்பு கொடுத்திருக்கார். அந்தப் படத்துல நான் ஒரு பாடல் மட்டும் பாடியிருந்தேன். பாடகராகதான் முதல்ல அறிமுகமானேன். இதுக்கப்புறம் இரும்புத்திரை படத்துல ஒரு பாடலை எழுதிப் பாடியிருந்தேன். அதுக்குப் பிறகு தாராள பிரபு, ஏலே ஆகிய திரைப்படங்களுக்கு இசையமைப்பாளர்களில் ஒருவராகப் பணியாற்றியிருக்கேன். இதுமட்டுமல்லாம, இயக்குநர் நலன் குமாரசாமி என்னோட ‘ நீ வெட்கம் கூறி’ பாடலை ‘குட்டி ஸ்டோரி’ ஆந்தலஜில சிங்க் பண்ணியிருந்தாரு. அந்த வடிவம் எனக்கு ரொம்பவே பிடிச்சிருந்தது.
இப்போ பல இண்டிபெண்டன்ட் கலைஞர்கள் சினிமால இப்போ பரபரப்பாக இயங்குறாங்க, இந்த வளர்ச்சியை எப்படிப் பார்க்கிறீங்க ?
முன்னாடியெல்லாம் வாய்ப்புக்காக இயக்குநர்கள்கிட்ட, தயாரிப்பாளர்கள்கிட்ட உங்களை நிரூபிக்க வேண்டிய சூழல் இருந்தது. அப்போ நம்மளோட வேலைகளெல்லாம் சி.டி-ல எடுத்துட்டுப் போவோம். இன்னைக்கு அப்படி இல்ல. ஒரு விஷயத்தை நம்மளால சுலபமாக ஒரு டிஜிட்டல் தளத்துல போட முடியும். இப்போ இண்டிபெண்டன்ட் ஆர்ட்டிஸ்ட் சினிமால பரபரப்பாக இயங்குகிற விஷயம் எங்களுக்குப் பின்னாடி வர்ற பல கலைஞர்களுக்கு நம்பிக்கை கொடுக்கும்.

‘கில்லர் கில்லர்’ பாடலை தனுஷ்தான் பாடியிருக்கார், பாடல் வரிகளுக்கு எதுவும் கமெண்ட்ஸ் சொன்னாரா?
அருண் மாதேஸ்வரன் எல்லோருக்கும் பாட்டு பிடிச்சிருக்குன்னு சொன்னாரு. நான் வச்ச எதிர்பார்ப்புக்கு மேல தனுஷ் சார் செமயா பாடியிருக்காரு. நான் எழுதுற பாடல்களுக்கு எப்பவும் ரஃப்பாகப் பாடி அனுப்புவேன். இந்தப் பாடலுக்கும் அப்படி ரஃப்பாக அனுப்பியிருந்தேன். நான் சூப்பரா பாடியிருக்கேன்னு நானே ஃபீல் பண்ணிட்டிருந்தேன். ஆனா, தனுஷ்சார் அதையெல்லாம்தாண்டி பயங்கரமான எனர்ஜியோட பாடியிருக்காரு. மியூசிக்கும் ரொம்ப நல்லா இருந்துச்சு. நான் தனுஷ் சார் குரல்ல இந்தப் பாட்டை கேட்கும்போது சிலிர்த்துப் போயிட்டேன். ‘ஜி.வி பிரகாஷ் – தனுஷ்’ இவங்க ரெண்டு பேர் இணைந்து படம் பண்ணுறது ஒரு பெரிய காம்போ. அதுல பாடல் எழுத வாய்ப்பு கிடைச்சதே ‘ Dream come True’ மொமென்ட்தான்.