பங்கார்பேட்டை, : வறட்சி நிவாரணம் வழங்க கோரி, பங்காருபேட்டை ரயில் நிலையம் முன் வரும் 25ம் தேதி விவசாயிகள் முற்றுகைப் போராட்டம் நடத்துகின்றனர்.
பங்கார்பேட்டை வனப்பூங்காவில் நேற்று நடந்த விவசாயிகள் சங்க கூட்டத்தில், இதன் தலைவர் மரகல் சீனிவாஸ் பேசியதாவது:
கர்நாடக மாநிலத்தில், 224 தாலுகாக்களில் வறட்சி ஏற்பட்டுள்ளதாக மாநில அரசு அறிவித்துள்ளது. வறட்சி நிலையை போக்குவதற்கு மத்திய அரசிடம், மாநில அரசு நிதியை எதிர்பார்த்து காத்திருக்கிறது.
இவர்கள், இரவில் தோன்றும் நட்சத்திரங்களை பகலில் பார்க்கலாம் என்று கருதுகின்றனர். இதெல்லாம் வேலைக்கு ஆகாது. வறட்சியால் பெரும்பாலான விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
எனவே பாதிப்பு இருக்கிற நேரத்தில்தான் அரசின் நிதி நிவாரணம் தேவைப்படும். எனவே விவசாயிகளின் மன வலியை வெளிப்படுத்தும் நோக்கத்தில், போராட்டம் மட்டுமே அரசின் கவனத்தை எட்டும் என்று நம்புகிறோம்.
எனவே, மாநில அரசு, மத்திய அரசை கேட்டுள்ள 25,000 கோடி ரூபாய் நிதி வழங்க வேண்டும்.
அப்படி வழங்கினால் விவசாயிகள் எதிர்பார்க்கும் நிவாரணம் கிடைக்கும். இதற்காக மாநில அரசும் கூட விவசாயிகள் மீது அக்கறை செலுத்தி, மாநில அரசின் நிதியையும் நிவாரணமாக வழங்க வேண்டும். பயிர்கள் இழப்பீட்டுக்கு ஏக்கருக்கு 25 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்பது எங்களது கோரிக்கை.
குடிநீர், கால்நடைகளுக்கு தீவனம், ஆகியவைகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எங்கள் பிரச்னைகள் மத்திய அரசுக்கு எட்டும் வகையில் இம்மாதம் 25ம் தேதி கால்நடைகளுடன் உலர்ந்த புல்லுக்கட்டு சுமைகளை தலையில் வைத்து பங்காருபேட்டை ரயில் நிலையத்தில் முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இக்கூட்டத்தில் கோலார் மாவட்ட விவசாயிகள் சங்கத் தலைவர் மஞ்சுநாத், கத்ரிநாத்தம் அப்போஜி ராவ், லட்சுமணன், கோவிந்தப்பா, கிரண், ஜான் பாஷா, முனி கிருஷ்ணா, விஷ்வா உட்பட பலர் பங்கேற்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்