பெங்களூரு : ”சுகாதார சேவையை மக்களின் வீட்டு வாசலுக்கு கொண்டு செல்வதே, காங்கிரஸ் அரசின் நோக்கம்,” என்று, முதல்வர் சித்தராமையா கூறினார்.
ரத்தசோகையை கட்டுப்படுத்துவதற்காக, சுகாதாரத் துறை சார்பில், ‘முக்த புஷ்டிக’ என்ற பெயரில் புதிய திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தின் தொடக்க விழா பெங்களூரு ஞானஜோதி அரங்கில் நடந்தது. முதல்வர் சித்தராமையா துவக்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
ஊட்டச்சத்து குறைபாட்டால் ரத்தசோகை ஏற்படுகிறது. ரத்தசோகை குறியீட்டில், குஜராத் மாநிலம் உயர்ந்து வருகிறது. அங்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது என்று, பிரதமர் நரேந்திர மோடி பதில் சொல்ல வேண்டும். இது தான் அவர்கள் குஜராத் மாடலா? சுகாதார சேவையை மக்களின், வீட்டு வாசலுக்கு கொண்டு செல்வதே, எங்கள் அரசின் நோக்கம்.
இதற்கு தேவையான, அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக உள்ளேன். சுகாதார அமைச்சர் தினேஷ் குண்டுராவ், பெண்கள் நலத்துறை அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கர் இணைந்து, நம் மாநிலத்தின் மக்கள் ஆரோக்கியமாக இருக்க, கடுமையாக உழைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
சுகாதார அமைச்சர் தினேஷ் குண்டுராவ் பேசியதாவது:
ரத்தசோகை பற்றி மக்களிடம் தெளிவான புரிதல் இல்லை. இதனால் சாமானிய மக்கள் நலன் கருதி, ரத்தசோகையை கட்டுப்படுத்த ‘முக்த புஷ்டிக’ என்ற பெயரில் புதிய திட்டம் துவக்கப்பட்டு உள்ளது.
மாநிலத்தில் ரத்த சோகையை கட்டுப்படுத்த, முதல்வர் சித்தராமையா சிறப்பு கவனம் செலுத்துகிறார். ஊட்டச்சத்து குறைப்பாடு, ரத்தசோகைக்கு முக்கிய காரணம். இதை தடுக்க சத்தான உணவு வழங்க 185.74 கோடி ரூபாய் மானியத்தை, முதல்வர் வழங்கியுள்ளார்.
ரத்தசோகையால் அறிவாற்றல் திறன் குறைந்து, குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படுகிறது. 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளில் 65 சதவீதம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 2025க்கும் ரத்தசோகை இல்லாத மாநிலமாக கர்நாடகாவை மாற்ற வேண்டும் என்பது எங்கள் குறிக்கோள்.
இவ்வாறு அவர் பேசினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement