பீஜிங், சீனாவின் வடக்கே உள்ள நிங்ஜியா மற்றும் கான்சு மாகாணங்களில், கடந்த சில ஆண்டுகளில், நுாற்றுக்கணக்கான மசூதிகளை, சீன அரசு மூடியுள்ளது. அதில் பெரும்பாலான கட்டடங்களின் வடிவமைப்பை மாற்றியுள்ளதாக, மனித உரிமை அமைப்பு புகார் கூறியுள்ளது.
நடவடிக்கை
நம் அண்டை நாடான சீனாவில், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சி நடக்கிறது. இங்கு முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகள் பல ஆண்டுகளாக நடந்து வருகின்றன.
முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் ஜின்ஜியாங் மாகாணத்தில், சீன அரசு பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
குறிப்பாக உய்கர் முஸ்லிம்கள் தனி முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டு, சித்ரவதை செய்யப்படுவதாக பரவலாக புகார்கள் கூறப்படுகின்றன.
நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள மாகாணங்களில்தான் முஸ்லிம்கள் அதிகளவில் வசித்து வருகின்றனர்.
இந்த இரண்டு மாகாணங்களில் கடந்த சில ஆண்டுகளில் பல மசூதிகளை சீன அரசு மூடியுள்ளது. குறிப்பிட்ட சுற்றளவு பகுதியில் ஒன்றுக்கும் மேற்பட்ட மசூதிகள் இருக்கக் கூடாது என்று நிபந்தனை விதித்து, இவை மூடப்பட்டு வருகின்றன.
சட்டவிரோதமாக கட்டப்பட்டதாக பல மசூதிகள் இடிக்கப்பட்டுள்ளன. இது ஒரு பக்கம் இருக்க, ஏற்கனவே இருந்த மசூதிகளை கைப்பற்றி, அதன் கட்டட வடிவமைப்பு மாற்றப்படுகின்றன.
இது குறித்து, எச்.ஆர்.டபுள்யூ., எனப்படும் மனித உரிமை கண்காணிப்பு என்ற சர்வதேச அமைப்பு, சீனாவில் ஆய்வு செய்துள்ளது. இந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
சீனத்துவமாக்கும் முயற்சியில் இறங்கியுள்ள அந்நாட்டு அரசு, முஸ்லிம் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கு எதிராக செயல்பட்டு வருகிறது.
சாட்டிலைட்
குறிப்பாக, 2016ல் ஷீ ஜின்பிங் அதிபராக பதவி யேற்றபின், சிறுபான்மையினருக்கு எதிரான அடக்குமுறை அதிகரித்துள்ளது.
நிங்ஜியா மற்றும் கான்சு மாகாணங்களில், 2019ல் இருந்து நுாற்றுக்கும் மேற்பட்ட மசூதிகள், பல காரணங்களால் மூடப்பட்டுள்ளன.
பின், இவை மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. இதன் வாயிலாக இவற்றை வழிபாட்டுக்கு பயன்படுத்த முடியாத நிலையை உருவாக்கியுள்ளனர்.
குறிப்பாக, நிங்ஜியா மாகாணத்தில் பதிவு செய்யப்பட்ட மசூதிகளில், மூன்றில் ஒரு பங்கு, அதாவது, 1,300 மசூதிகள் மூடப்பட்டுள்ளன.
ஒட்டுமொத்தமாக எவ்வளவு மசூதிகள் மூடப்பட்டுள்ளன என்பதற்கான புள்ளி விபரங்கள் இல்லை.
இருப்பினும், சாட்டிலைட் படங்களை வைத்து ஒப்பிடும்போது, 2019ல் இருந்த, நுாற்றுக்கும் மேற்பட்ட மசூதிகள் தற்போது இல்லை.
இதைத் தவிர நுாற்றுக்கும் மேற்பட்ட மசூதிகளின் கட்ட மைப்பை மாற்றியுள்ளனர்.
இவ்வாறு அந்த அமைப்பு கூறியுள்ளது.
இதற்கிடையே ஆஸ்திரேலிய கொள்கை மையம் எடுத்துள்ள கணக்கெடுப்பின்படி, இந்த இரண்டு மாகாணங்களில் இருந்த, 16,000 மசூதிகளில், 65 சதவீத மசூதிகள், 2017ல் இருந்து அழிக்கப்பட்டுஉள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்