ஆரம்ப காலத்தில் பெரிய நடிகர்களின் படங்களில் மட்டுமே கவனம் செலுத்தினேன் : ஜோதிகா ஓபன் டாக்

தமிழ் சினிமாவில் ஹீரோக்களிடம் மட்டுமே போட்டி என்கிற நிலை இருந்து வந்த காலகட்டத்தில், அதற்கு இணையாக நடிகை சிம்ரன், ஜோதிகா இருவரும் சமகால போட்டியாளர்களாக வலம் வந்தனர். நடிகை ஜோதிகா ஆரம்பத்தில் சாக்லேட் பேபி போன்ற கதாபாத்திரங்களில் நடித்தாலும் போகப்போக கதைக்கும் கதாபாத்திரத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை தேர்ந்தெடுத்து நடிக்க ஆரம்பித்தார்.

திருமணத்திற்கு பின்பு ஒரு இடைவெளி விட்டு மீண்டும் திரையுலகில் நுழைந்து தற்போது நடித்து வரும் ஜோதிகா முழுக்க முழுக்க நடிப்புக்கு தீனி போடும் கதாபாத்திரங்களாகவே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது வெளியாகி உள்ள காதல் ; தி கோர் என்கிற மலையாள படத்தில் மம்முட்டியின் ஜோடியாக நடித்துள்ளார்.

இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசும்போது, “என்னுடைய ஆரம்ப காலகட்டத்தில் நான் பிரபல ஹீரோக்களின் படங்களில் நடிப்பதற்கே முக்கியத்துவம் கொடுத்து கவனம் செலுத்தினேன். 17 வயதில் சினிமாவில் நுழைந்ததால் எனக்கு அப்போது சினிமா குறித்த புரிதல் அப்படித்தான் இருந்தது. பிரபல ஹீரோக்களின் படங்களில் நடிக்கும்போது நாமும் விரைவில் பிரபலமாகலாம் என்பதுடன் நல்ல வருமானமும் கிடைக்கும் என்பதால் அப்படி படங்களை தேர்ந்தெடுத்து நடித்தேன். ஒரு கட்டத்தில் நல்ல கதாபாத்திரங்களும் கதையும் தான் நம்மை நீண்ட காலத்திற்கு ரசிகர்கள் மனதில் நிலைத்திருக்க செய்யும் என முடிவெடுத்து கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து எனது படங்களை தேர்வு செய்ய துவங்கினேன். தற்போது நடித்துள்ள இந்த காதல் ; தி கோர் படமும் அப்படி நடிப்புக்கு தீனி போடும் ஒரு படம் தான்” என்று கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.