சீனாவில் எச்9என்2 தொற்று, குழந்தைகளுக்கு சுவாச நோய் பரவல்: உற்று கண்காணிப்பதாக மத்திய அரசு தகவல்

புதுடெல்லி: “வடக்கு சீனாவில் எச்9என்2 தொற்று மற்றும் குழந்தைகளுக்கு சுவாச நோய் பரவி வருவதை மத்திய சுகாதார அமைச்சகம் உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது” என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சீனாவில் குழந்தைகளை அச்சுறுத்தும் நிமோனியா தொற்று வேகமாகப் பரவி வருவதாக செய்தி வெளியான நிலையில், மத்திய சுகாதார அமைச்சகம் இது குறித்து வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், “வடக்கு சீனாவில் எச்9என்2 தொற்று மற்றும் குழந்தைகளுக்கு சுவாச நோய் பரவி வருவதை மத்திய சுகாதார அமைச்சகம் உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது. சீனாவில் பதிவாகும் பறவைக் காய்ச்சல் பாதிப்பு மற்றும் சுவாச நோய்களின் பரவல் ஆகிய இரண்டிலிருந்தும் இந்தியாவுக்குக் குறைந்த ஆபத்து உள்ளது.

எந்தவொரு பொது சுகாதார அவசர நிலைக்கும் இந்தியா தயாராக உள்ளது. இதுபோன்ற பொது சுகாதாரப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கான முழுமையான மற்றும் ஒருங்கிணைந்த செயல்திட்டத்தைப் பின்பற்ற இந்தியா ஒரு சுகாதார அணுகுமுறையைத் தொடங்குகிறது. குறிப்பாக, கோவிட் பெருந்தொற்றுக்குப் பின்னர் சுகாதார உள்கட்டமைப்பு கணிசமாக வலுப்படுத்தப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளது.

பின்னணி என்ன? – சீனாவில் குழந்தைகளை அச்சுறுத்தும் நிமோனியா தொற்று வேகமாகப் பரவிவருவதாக செய்தி வெளியாகி பெரும் பீதியை கிளப்பியது. இந்த நிலையில், உலக சுகாதார அமைப்பு, சீன நோய் கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பு மையம் (the Chinese Center for Disease Control and Prevention) மற்றும் பீஜிங் குழந்தைகள் மருத்துவமனை ஆகியவற்றை தொடர்பு கொண்டு விசாரித்தது. அப்போது அவர்கள், ”பீஜிங் மற்றும் லையானிங் பகுதிகளில் அசாதாரணமான அல்லது புதிய நோய்க் கிருமிகள் எதுவும் கண்டறியப்படவில்லை. இது ஏற்கெனவே அறியப்பட்ட நோய்க் கிருமிகளால் ஏற்படும் சுவாச நோய்களின் பொதுவான அதிகரிப்புதான்” என்று தெரிவித்ததாக உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.

மேலும், “சீனாவின் தற்போதைய சூழலை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம். சீனாவில் உள்ள தேசிய அதிகாரிகளுடன் நெருங்கிய தொடர்பில் இருக்கிறோம்” என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்தது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.