புதுடில்லி, ‘உத்தர பிரதேசத்தை போலவே, ‘ஹலால்’ தரச்சான்று பெற்ற பொருட்களுக்கு பீஹாரிலும் தடை விதிக்க வேண்டும்’ என, அம்மாநில முதல்வர் நிதீஷ் குமாருக்கு மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் கடிதம் எழுதியுள்ளார்.
இஸ்லாமிய மார்க்க சட்டவிதிகளின்படி, ‘ஹலால்’ என்றால் அனுமதிக்கப்பட்டவை என்றும், ‘ஹராம்’ என்றால் தடை செய்யப்பட்டவை என்றும் அர்த்தம். நம் நாட்டில், ஹலால் தரச்சான்று சட்டப்பூர்வமாக நடைமுறையில் இல்லை.
வழக்குப்பதிவு
ஆனாலும் சில தனியார் நிறுவனங்கள், உணவு, மருந்து, அழகு சாதனப்பொருட்களுக்கு, ஹலால் சான்று அளிக்கின்றன.
இந்நிலையில், உ.பி.,யின் லக்னோவை சேர்ந்த சைலேந்திர குமார் சர்மா என்பவர் போலீசில் புகார் அளித்தார்.
அதில், சென்னையைச் சேர்ந்த ஹலால் இண்டியா பிரைவேட் லிமிடெட், புதுடில்லியைச் சேர்ந்த ஜமாத் உலமா ஹிண்ட் அறக்கட்டளை, மும்பையைச் சேர்ந்த ஹலால் கவுன்சில் ஆப் இண்டியா- மற்றும் ஜமாத் உலமா – உள்ளிட்ட அமைப்புகள், பல்வேறு பொருட்களுக்கு சட்டவிரோதமாக, ஹலால் தரச்சான்று அளிப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து, ஹலால் தரச்சான்று பெற்ற பொருட்களின் விற்பனைக்கு சமீபத்தில் உ.பி., அரசு தடை விதித்தது.
வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு மட்டும் தடையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பீஹாரைச் சேர்ந்த பா.ஜ., – எம்.பி.,யும், மத்திய அமைச்சருமான கிரிராஜ் சிங், பீஹார் முதல்வர் நிதீஷ் குமாருக்கு கடிதம் ஒன்றை நேற்று எழுதிஉள்ளார்.
அதன் விபரம்:
நம் நாட்டில் இஸ்லாத்துடன் தொடர்பில்லாத பொருட்கள் இஸ்லாமிய மயமாக்கப்படுகின்றன.
நடவடிக்கை
சில தனியார் நிறுவனங்கள், ஹலால் தரச்சான்று அளிப்பதாக சுயமாக அறிவித்து, நம் நாட்டில் தயாரிக்கப்படும் உணவுப் பொருட்கள், சமையல் எண்ணெய், நொறுக்கு தின்பண்டங்கள், உலர் பழங்கள், இனிப்புகள், அழகு சாதனப்பொருட்கள், மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு தரச்சான்று அளித்து வருகின்றன.
இந்த, ஹலால் தரச்சான்று அளிக்கும் வர்த்தகம், உலகம் முழுதும் பல்லாயிரம் கோடி ரூபாய் வருவாய் ஈட்டி வருகிறது.
இதில் கிடைக்கும் வருவாய், பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படுவதும் வெளிச்சத்துக்கு வந்து உள்ளது.
இந்தியா போன்ற மதச்சார்பற்ற ஜனநாயக நாட்டில், ஹலால் சான்று வழங்கும் தொழில் செய்வது அரசியல் சாசனத்துக்கு எதிரானது மட்டுமின்றி தேச துரோகமும் கூட.
எனவே, உத்தர பிரதேச அரசு விதித்துஉள்ளதை போல, ஹலால் தரச்சான்று அளிக்கப்பட்ட பொருட்களை தயாரிக்கவும், சேமிக்கவும், வினியோகிக்கவும், விற்பனை செய்யவும் பீஹார் அரசு தடை விதிக்க வேண்டும்.
உணவு பொருட்களின் தரத்தை சோதித்து, அதற்கான தரச்சான்றை எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., எனப்படும் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் சட்டப்பூர்வமாக அளித்து வரும் நிலையில், ஹலால் சான்றிதழ் என்ற பெயரில் சில அமைப்புகள் அளித்து வருவதை ஏற்க முடியாது.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்