ஆரண்ய காண்டம் திரைப்படமும் ஒரு வசனத்துடன் தொடங்கும். அத்திரைப்படம் அந்த வசனத்தை நியாயம் செய்திருக்கும். அதுமட்டுமன்றி அந்த வசனத்தை எடுத்துரைக்கும் வகையில் ‘ஆரண்ய காண்டம்’ திரைப்படம் நகரும். அதே போல கொடுக்காப்புளியின் இந்த ஒற்றை வசனம் தியாகராஜா குமாரராஜா சினிமாவை கையாளும் விதத்தை எடுத்துரைக்கும்.

‘ஆரண்ய காண்டம்’ திரைப்படத்தில் பசுபதி கொடுக்காப்புளியிடம் கேட்ட கேள்விக்கான பதில் குறித்து நாம் வழக்கம்போல ஒரு பதிலுக்கான எதிர்பார்ப்பை வைத்திருப்போம். ஆனால், அதுதான் இல்லை. அங்குதான் குமாரராஜா தனது மேஜிக்கை நிகழ்த்தினார். அங்கு கொடுக்காப்புளி சிறுவனின் பதிலைக் கேட்டு உறுதியாக பார்வையாளர்கள் உதட்டோரத்தில் புன்னகைத்திருப்பர். இப்படியான பல வசனங்களை, காட்சிகளை குமாரராஜாவன் தனித்துவமாகச் சொல்லலாம். வாழ்க்கையை அதன் தத்துவங்களைப் பகடி செய்து பார்ப்பது தியாகராஜாவின் படங்கள்.
நேர்காணல்களில் இவரின் எளிமையான பதில்களும், சாந்தமாக இவர் தனது அனுபவங்களை எடுத்துரைக்கும் விதமும் பார்வையாளர்களை வாழ்வின் பல பக்கங்களைப் புரட்ட வைக்கும். இயக்குநர் தியாகராஜா குமாராஜாவின் 47 வது பிறந்தநாள் இன்று !
2011 ஆம் ஆண்டு ஒரு பேட்டியில் இயக்குநர் தியாகராஜா குமாரராஜாவிடம் உங்களின் முதல் திரைப்படம் ஓடிக்கொண்டிருக்கிறது, படபடப்பாக இருக்கிறதா? ” என தொகுப்பாளர் ஒரு கேள்வி எழுப்பினார். அதற்கு குமாரராஜா ” No, I’m chill ” என பதிலளித்திருப்பார். இதே ‘ காம் & கம்போஸ்ட்’ குணமாகதான் அனைத்து நேர்காணகளிலும் அமர்ந்திருப்பார். ஆனால், இவரின் கதாபாத்திரங்கள் அனைத்தும் இதற்கு நேர்மாறானது. குமாரராஜாவின் உலகத்தில் அந்த கதாபாத்திரங்கள் பரபரவெனச் சுற்றி பல அனுபவத்தை சந்திப்பார்கள்.

தியாகராஜா குமாராஜாவின் உலகில் வாழும் மனிதர்கள் :
குமாரராஜாவின் உலகத்தில் வாழும் கேங்ஸ்டர்கள் அனைவரும் மிகவும் மூர்க்க குணமுடையவர்கள், தான் என்கிற மமதையில் சுற்றித் திரிவார்கள். சிங்கப் பெருமாள், கஜேந்திரன் கதாபாத்திரங்களும் அப்படிப்பட்டவைதான். தன் மீதுதான் குறையென அறிந்த போதிலும் சுப்புவை அடிப்பது, சேவலை வெட்டுவது என சிங்கப்பெருமாளின் பல செயல்களை இதற்கு சான்றாக அடுக்கிச் சொல்லலாம். இந்த வயதான உடல்மொழிக்கு ஏற்றவாறு ஜாக்கி ஷெராஃப்பும், பாக்ஸர் ஆறுமுகமும் அசத்தியிருப்பார்கள். இதனையடுத்து தியாகராஜா குமாராஜாவின் உலகத்தில் வாழும் பெண் கதாபாத்திரங்கள்தான் திரைப்படத்தின் மையமாக இருப்பார்கள். ‘ஆரண்ய காண்டம்’ திரைப்படத்திற்கு முதற் மற்றும் முக்கியப் புள்ளி சுப்பு கதாபாத்திரம்தான். பல சூழ்ச்சிகளையும் தந்திரங்களையும் கையிலெடுத்து சிங்கப்பெருமாளையும் சப்பையையும் வீழ்த்தி பணத்தை எடுத்துக் கொண்டு நடந்துச் செல்வார்.
இந்தக் காட்சியின் தொடக்கத்தில் ஒரு கழுகின் ஒலி பிண்ணனியில் ஒலிபரபப்படும். சுப்புவின் செயலை கழுகின் செயலுக்கு ஒப்பாக அந்த ஒலியை குமாரராஜா வைத்திருப்பார். அதாவது அனைவரின் செயல்களையும் விரிவாக கவனித்து சரியான நேரம் வரை காத்திருந்து வென்றது கழுகு என்கிற அர்த்ததில் இந்த காட்சி வெளிப்படும். இதனையடுத்து சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்தில் லீலா கதாபாத்திரம் சரி, தவறுகள் குறித்த வரையறையிலிருந்து முரண்பட்டு சில விஷயங்களை நமக்கு எடுத்துரைக்கும். ” ‘சக்தி மேல் பக்தி வை’ ங்கிற படத்துல நான் அம்மனாக நடிச்சிருப்பேன், அப்படி பார்கிறவங்களுக்கு அப்படி, இப்படி பார்க்கிறவங்களுக்கு இப்படி ” என வசனத்தை பேசி பார்வையாளர்களை ‘எது தவறு’ என ஆழ்ந்து யோசிக்க வைத்திருப்பார்.

குமாரராஜாவின் கதாபாத்திரங்களில் வெளிப்படும் தந்தை – மகன் குறித்த உறவு:
‘ஆரண்ய காண்டம்’ திரைப்படத்தில் காளையன் தனது மகன் கொடுக்காப்புளியுடன் சுற்றி வருவார். திரைப்படத்தின் இடையிடையே காளையனை அவரின் மகன் திட்டிக் கொண்டிருப்பார். பல இடங்களில் காளையன் மீது அவரின் மகன் கோபம் கொள்வார். ஆனால், இப்படியான அளப்பரிய கோபம் அடங்கியிருந்தாலும் தனது தந்தையிடத்தில் அந்த மகன் வெறுப்பை வெளிப்படுத்தி இருக்கவேமாட்டார்.
ஒரு பிரச்னை நிகழும் சூழலில் தன் தந்தைக்கு எதுவும் நேர்ந்துவிடுமோ என்கிற பயம் கொள்ளும் காட்சிகளெல்லாம் கொடுக்காப்புளியின் அன்பையும் நேசிப்பின் ஆழத்தையும் விளக்கும். அதன் பிறகு, சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்தில் ராசுக்குட்டிக்கு தன் தந்தை ஷில்பாவாக இருந்தாலும் மாணிக்கமாக இருந்தாலும் அவன் கண்களுக்கு எப்போதும் அவர் அவனின் தந்தைதான். இந்த இரண்டு திரைப்படங்களிலும் தனது மகன்களுக்கு தந்தைகள் இருவரும் அறிவுரைகளை வழங்குவார்கள். வாழ்க்கையின் பயணம், உலகம் நம்மீது வைத்திருக்கும் பார்வை என எடுத்துரைப்பார்கள். அந்த அறிவுரைகள் கொடுக்காப்புளி, ராசுக்குட்டியை தாண்டி நமக்கும் பொருந்தும். இப்படியான மனிதர்கள்தான் குமாராஜாவின் உலகத்தில் வாழ்பவர்கள்.
குமாராஜாவின் தத்துவங்களும் நய்யாண்டியும் :
குமாராஜாவின் திரைப்படங்களில் நய்யாண்டி காமெடிகளுக்கு பஞ்சமிருக்காது. அந்த நய்யாண்டிகள் சிரிக்க வைப்பதுமட்டுமல்லாமல் சிந்திக்கவும் வைக்கும். ‘ஆரண்ய காண்டம்’ திரைப்படத்தில் கஜேந்திரனிடம் ஜோசியர் “நீங்க யோசிக்கிற பூவை நான் சரியாக சொல்றேன்” எனக் கூறுவார். அங்கு ஜோசியரின் பதிலை மறுத்து ” நான் யோசித்தது பிரபு, குஷ்பு ” எனக் கூறுவார். இது வெறும் காமெடி ஜோக்காக மட்டும் அந்த இடத்தில் கடந்து போய்விடாது.
காளையன் தனது மகனிடத்தில் ஒரே செயலுக்கு மக்களின் பார்வை நம் மீதும், சமூக அந்தஸ்து பெற்றவர்கள் மீதும் எப்படி இருக்கிறது என வேறுபாட்டை அவருக்கேற்ற உடல்மொழியில் எடுத்துரைப்பார். இதனையடுத்து, சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்தில் சூரி -முட்டை பப்ஸ் நண்பர்கள் குழு தங்கள் வயதுகேற்ற பலவற்றையை வெளிப்படையாக பேசிக்கொள்வார்கள். இப்படியான பல நய்யாண்டி காமெடிகள் வெறுமென சிரிக்க வைக்கும் காட்சியாக கடந்து போய்விடாது.
சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்தில் , சுரங்கப் பாதை வழியில் ஷில்பாவும் அற்புதமும் இறுதியாக கேள்விகளையும் பதில்களையும் பரிமாறிக் கொள்வது பல புரிதலை அற்புதத்திற்கு புகட்டும். திரைப்படத்தின் இறுதியில் லீலா கதாபாத்திரம் தனது மகனிடத்தில் ” 1000 வருஷத்துக்கு முன்னாடி துணி போட்டுருந்தாங்களான்னு கேட்டா தெரியாது…100 வருஷத்துக்கு அப்புறம் போடுவாங்களான்னு தெரியாது ” என அவருக்கு முரணாக தெரியும் பல விஷயங்களுக்கானப் புரிதல்களை நம்மிடையே விளக்கியிருப்பார். இதனையடுத்து முகில் கதாபாத்திரம் வேம்புவிடம் வீட்டில் பேசும் வசனங்களும், ஏ.டி.எம் குறித்தான வசனங்களும் நம்மைச் சிந்திக்க வைக்கும். இப்படியான பல பாடங்களையும், புரிதல்களையும் நமக்கு புகட்டியிருக்கிறது குமாரராஜாவின் கதாபாத்திரங்கள்.
” இந்த வாழ்க்கையில் உன்னதமான ஒன்று உண்டென்றால்… அது இந்த வாழ்க்கையேதான் ! “

குமாராஜாவின் மேக்கிங் :
தொழில்நுட்ப ரீதியாகவும் பல புதிய அனுபவங்களை பார்வையாளர்களுக்கு கொடுத்திருக்கிறார், குமாரராஜா. திரைப்படத்திற்கு மட்டுமன்றி அதன் முன்னணியாக வரும் போஸ்டர்களுக்கும் பெரிதளவில் மெனக்கெட்டுப் புதியவைகளைக் கொடுக்க முயல்வார். இதன் தொடக்கப்புள்ளியை நாம் ‘ஆரண்ய காண்டம்’ திரைப்படத்தின் போஸ்டர்களில் பார்க்கலாம். நாம் பார்க்கும் திரைப்படங்களின் போஸ்டர்கள் பெரும்பான்மையாக அந்தந்த கதாபாத்திரங்களின் புகைப்படங்களை வைத்து டிசைன் செய்திருப்பார்கள். ‘ஆரண்ய காண்டம்’ திரைப்படத்தின் போஸ்டர் மஞ்சள், கருப்பு நிறத்துடன் ஒரு அனிமேடட் கதாபாத்திரம் வாயில் சுருட்டு வைத்திருப்பதாகவும் அதனை சுற்றி கதைகளத்தை யூகிப்பதற்கான சில அடையாளங்களையும் வைத்திருப்பார்.
இதெல்லாம் புறமிருக்க படத்தொகுப்பு நுட்பத்திலும் புதிய யுக்தியை கையாண்டிருப்பார். ‘ஆரண்ய காண்டம்’ திரைப்படத்தின் இறுதியில் பசுபதியும் கஜேந்திரனும் சண்டையிட்டுக் கொள்வார்கள். அவர்கள் ஒருவரையொருவர் வெட்டிக் கொள்ளும் தருணத்தில் கட் செய்திருப்பார்கள். இந்த இடத்தில் ஒரு கட் நிகழப் போகிறதென யாரும் எதிர்பார்த்திருக்கமாட்டார்கள். அங்கு யார் உயிரை மாய்த்துக் கொள்ளப் போகிறார்கள் என்பதுதான் பார்வையாளர்களின் அவதானிப்பாக இருந்திருக்கும். ஒரு நிமிடத்திற்கு பிறகு பசுபதியை காட்டுவார்கள். அப்போது அந்த காட்சியின் முழுமை பார்வையாளர்களுக்கு புலப்பட்டுவிடும்.

குமாரராஜாவின் ஷாட் கம்போஸிங் ஐடியாவும் டாப் ரகம்தான். ‘சூப்பர் டீலக்ஸ்’ திரைப்படத்தில் லீலா தனது மகனை காப்பாற்றுவதற்காக மருத்துவமனையில் அழுது பலரிடம் உதவி கேட்பார். அந்த தருணம் முழுவதையும் சிங்கிள் ஷாட்டாகப் பதிவு செய்திருப்பார். அந்த கட் அல்லாத சிங்கிள் ஷாட் அந்த காட்சிக்கான எமோஷனை பார்வையாளர்களிடம் விலகச் செய்யாமல் லீலாவின் பரிதாப நிலையை நம்மிடையே கடத்தியிருப்பார். இதனையடுத்து குமாராஜா திரைப்படங்களின் லைட்டிங்கும் நமக்கு புதுமையான அனுபவத்தை கொடுக்கும். உதாரணமாக , ‘ஆரண்ய காண்டம்’ திரைப்படத்தின் இறுதியில் கொடுக்காப்புளி பசுபதியிடம் பேசும் காட்சிகளின் சிவப்பு வண்ன லைட்டிங்கை சொல்லலாம். ‘சூப்பர் டீலக்ஸ்’ திரைப்படத்தின் நிலபரப்பும் லைட்டிங்கும் புதுமையான வடிவில் அமைத்து பார்வையாளர்களை ஃபேன்டஸி உலகத்திற்கு அழைத்துச் சென்று மாயாஜாலத்தை நிகழ்த்தியிருப்பார்.
இப்படியான மாற்று உலகத்திற்கு நம்மை அழைத்துச் சென்று பல புரிதல்களையும் அனுபவங்களையும் நமக்கு புகட்டிய குமாரராஜா சாருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் ! தியாகராஜன் குமாரராஜாவின் படத்தில் உங்களுக்குப் பிடித்த காட்சியைக் கமென்ட்டில் பதிவிடுங்கள்!