ஒரு மாதத்திற்கு டிஜிட்டல் பரிவர்த்தனைகள் மட்டுமே செய்யுங்கள்: பிரதமர் மோடி வலியுறுத்தல்

புதுடெல்லி,

பிரதமராக பதவியேற்றது முதல் மாதம் தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் மன் கி பாத் எனும் நிகழ்ச்சியில் மோடி உரையாற்றி வருகிறார். அந்த வகையில் இந்த மாதத்திற்கான மன் கி பாத் நிகழ்ச்சி இன்று ஒலிபரப்பப் பட்டது. இதில், பிரதமர் மோடி பேசியதாவது:- நாட்டை கட்டமைக்கும் பணியில் மக்கள் ஈடுபடும்போது, தேசம் முன்னேறிச் செல்வதை யாராலும் தடுக்க முடியாது.

நாட்டில் ஏற்பட்டுள்ள பல மாற்றங்களை மக்கள் முன்னெடுத்து வருகின்றனர். நாட்டு மக்கள் அனைவருக்கும் அரசியலமைப்பு தின வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். தீபாவளி உள்ளிட்ட பண்டிகை நாட்களில் உள்நாட்டு பொருட்கள் ரூ.4 லட்சம் கோடி அளவுக்கு வர்த்தகம் ஆகி உள்ளது. அடுத்த ஒரு மாதத்திற்கு டிஜிட்டல் பரிவர்த்தனை மட்டும் மேற்கொள்ள வேண்டும். கையில் இருந்து பணம் கொடுக்காமல் டிஜிட்டல் பரிவர்த்தனை மேற்கொண்டு எனக்கு பகிருங்கள்.

தீபாவளி பண்டிகையின் போது டிஜிட்டல் பரிமாற்றம் அதிகம் நடந்தது. தமிழகத்தின் கோவையை சேர்ந்தவர் லோகநாதன். சிறு வயதில் இருந்து ஏழைக் குழந்தைகள் கிழிந்த ஆடையை அணிவதை பார்த்து கலங்கினார். தொடர்ந்து, அத்தகைய குழந்தைகளுக்கு உதவ உறுதிமொழி எடுத்து தனது சம்பளத்தின் ஒரு பகுதியை அவர்களுக்கு வழங்கத் துவங்கினார். போதிய வருமானம் கிடைக்காத போதும், கழிப்பறையை சுத்தம் செய்து ஏழைகளுக்கு தொடர்ந்து உதவி கிடைப்பதை உறுதி செய்துள்ளார்.

இந்த பணியில் 25 ஆண்டுகளாக ஈடுபட்ட லோகநாதன், 1,500க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு உதவி உள்ளார். அவரது முயற்சிக்கு பாராட்டு தெரிவிக்கிறேன். இது போன்ற முயற்சிகள் நாட்டு மக்களுக்கு முன்மாதிரியாக இருப்பதுடன், உதவி செய்வதற்கு ஊக்கமாக இருக்கும். வெளிநாடுகளில் இல்லாமல் நாட்டிற்குள் இந்தியர்கள் திருமண கொண்டாட்டங்களை மேற்கொள்ள வேண்டும்” என்று பிரதமர் மோடி பேசினார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.