துமகூரு : அதிருப்தியில் இருக்கும் துமகூரு பா.ஜ., – எம்.பி., பசவராஜுக்கு காங்கிரஸ் வலை விரித்துள்ளது.
சட்டசபை தேர்தலில் அமோக வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்த காங்கிரஸ், உற்சாகத்துடன் லோக்சபா தேர்தலுக்கு தயாராகிறது. ஆனால் சில தொகுதிகளில், காங்கிரசுக்கு வேட்பாளர்கள் இல்லை.
எனவே பா.ஜ., – ம.ஜ.த., அதிருப்தி தலைவர்களை இழுக்கிறது. ஏற்கனவே சிலர் காங்கிரசுக்கு வந்துள்ளனர். தற்போது துமகூரு பா.ஜ., – எம்.பி., பசவராஜுக்கு காங்கிரஸ் வலை விரித்துள்ளது. இம்முறை லோக்சபா தேர்தலில், மூத்த எம்.பி.,க்களுக்கு பா.ஜ., சீட் கிடைப்பது சந்தேகம் என கூறப்படுகிறது.
எனவே, பசவராஜ் காங்கிரசுக்கு தாவ ஆலோசிப்பதாக கூறப்படுகிறது. துமகூரில் நேற்று அவர் கூறியதாவது:
முன்னாள் அமைச்சர் சோமண்ணா மட்டுமின்றி, என்னையும் கூட காங்கிரசார் அழைக்கின்றனர். உங்களுக்கு வயதாகிவிட்டது. ஆனாலும் பரவாயில்லை. காங்கிரசுக்கு வாருங்கள் என அழைக்கின்றனர். ஆனால் நான் மறுத்துவிட்டேன்.
சோமண்ணா காங்கிரசுக்கு செல்வது குறித்து, எனக்கு தெரியாது. லோக்சபா தேர்தலில், துமகூரு தொகுதியில் போட்டியிடுவதாக, அவர் கூறியுள்ளார்.
தொகுதியில் அவருக்கு சாதகமான சூழ்நிலை உள்ளது. அதே போன்று, முத்தஹனுமேகவுடாவுக்கும் கூட சாதகமான சூழ்நிலை உள்ளது.
பா.ஜ., மேலிடம் யாருக்கு சீட் கொடுக்கிறதோ, அவருக்கு ஆதரவாக நான் பணியாற்றுவேன். சோமண்ணாவுக்கு சீட் கிடைத்தாலும், அவருக்காக வேலை செய்வேன்.
அவர் இரண்டு முறை துமகூரு மாவட்ட பொறுப்பு அமைச்சராக இருந்தவர். முந்தைய லோக்சபா தேர்தலின்போது, துமகூரு பொறுப்பை ஏற்றிருந்தார். தேவகவுடாவுக்கு எதிராக, நான் வெற்றி பெறவும், சோமண்ணாவே காரணம்.
இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்