இந்தியாவின் முக்கிய நகரங்களுக்கு, பயணியர் விரைவில் சென்றடையும் வகையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, ‘வந்தே பாரத்’ ரயில் சேவையை துவக்கி உள்ளது.
இந்த ரயில்கள் 8 பெட்டிகளை மட்டுமே கொண்டது. சாதாரண எக்ஸ்பிரஸ் ரயில்கள் மணிக்கு 110 கிலோ மீட்டர் வேகத்திலும்; சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில் மணிக்கு 110 முதல் 150 கிலோ மீட்டர் வேகத்திலும் இயங்குகிறது.
ஆனால் ‘வந்தே பாரத்’ மணிக்கு 160 கிலோ மீட்டர் வேகத்தில் செல்ல கூடிய திறன் உடையது. கர்நாடகாவுக்குள் தற்போது இரண்டு, ‘வந்தே பாரத்’ ரயில்கள் இயங்குகிறது.
தமிழகத்தில் சென்னையில் இருந்து கர்நாடகாவின் மைசூருக்கும்; பெங்களூரில் இருந்து தார்வாட்டிற்கும் இயக்கப்பட்டு வருகிறது.
14 மணி நேரம் 15 நிமிடம்
இந்நிலையில் தமிழகத்தின் திருநெல்வேலி, கன்னியாகுமரி, துாத்துக்குடி, மதுரை ஆகிய தென்மாவட்ட மக்கள், பெங்களூரில் அதிகளவில் வசித்து வருகின்றனர். மைசூரில் இருந்து பெங்களூரு வழியாக, துாத்துக்குடிக்கு முதலில் ரயில் இயக்கப்பட்டு வந்தது.
தென் மாவட்டத்திற்கு செல்லும் ஒரே ரயில் என்பதால், அந்த ரயிலில் கூட்டம் அலைமோதியது. பயணியர் கேட்டு கொண்டதன் பேரில், பெங்களூரு – நாகர்கோவில் இடையில் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது.
பெங்களூரில் இருந்து தினமும் மாலை 5:15 மணிக்கு புறப்படும் ரயில், மறுநாள் காலை 7:30 மணிக்கு நாகர்கோவிலை சென்றடைகிறது. பயண நேரம் 14 மணி நேரம் 15 நிமிடமாக உள்ளது.
எஸ்.வி.டி., ரயில்
பெங்களூரு – நாகர்கோவில் ரயில் முதலில், சிட்டி ரயில் நிலையத்தில் இருந்து இயக்கப்பட்டது. தற்போது எஸ்.வி.டி., எனும் சர் விஸ்வேஸ்வரய்யா டெர்மினல் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படுகிறது.
இதனால் கே.பி., அக்ரஹாரா, ராஜாஜிநகர், விஜயநகர், எலஹங்கா மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும், தமிழகத்தின் தென் மாவட்ட மக்களுக்கு சிரமம் ஏற்பட்டு உள்ளது. விஸ்வேஸ்வரய்யா டெர்மினலுக்கு அதிக கட்டணம் கொடுத்து, ஆட்டோ, வாடகை கார்களில் செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.
கனவு நனவாகுமா?
பெங்களூரு – திருநெல்வேலியில் இடையில் ரயில் பயணம் 589 கிலோ மீட்டர் துாரம். இந்த வழித்தடம் மின்மயமாக்கப்பட்டு உள்ளது. சேலம் – பெங்களூரு இடையில் இரட்டை ரயில் பாதை உள்ளது.
ஆனால் சேலம் முதல் திண்டுக்கல் வரை 159 கிலோ மீட்டர் துாரத்திற்கு, ஒற்றை ரயில் பாதை தான் உள்ளது. இதனால் ஒற்றை ரயில் பாதையில், வந்தே பாரத் ரயில் இயக்க அதிகாரிகள் தயக்கம் காட்டுவதாக சொல்லப்படுகிறது.
தமிழகத்தின் சென்னையில் இருந்து மதுரை வரை சதாப்தி எக்ஸ்பிரஸ் இயக்கப்படுகிறது. ஆனால் பெங்களூரில் இருந்து ராஜ்தானி, சதாப்தி, துரந்தோ, டபுள் டக்கர், ஜன்சதாப்தி என அதிவிரைவு ரயில்கள் தமிழக தென்மாவட்டங்களுக்கு இல்லை.
இந்த குறையை போக்கும் வகையில், வந்தே பாரத் இயக்க வேண்டும் என்பது, தமிழக தென்மாவட்ட மக்கள் கனவாக உள்ளது. இந்த கனவை தென்மேற்கு ரயில்வே நனவாக்குமா என, ரயில் பயணியர் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்து உள்ளது.
இதுகுறித்து தென்மேற்கு ரயில்வே மக்கள் தொடர்பு அதிகாரி நரேந்திரா கூறியதாவது,
வந்தே பாரத் ரயில்களை இயக்குவது, அவ்வளவு எளிதான காரியம் இல்லை. அந்த ரயிலுக்கு என தனியாக சிக்னல்கள், பாதைகள் ஏற்படுத்த வேண்டும்.
இயக்கப்படும் பாதை தகுதியானது என்று, ஆய்வு செய்ய வேண்டும்.
ரயில்களை இயக்குவது எங்கள் கட்டுப்பாட்டில் வருவது இல்லை. மத்திய ரயில்வே அமைச்சகம் முடிவு செய்ய வேண்டும். பெங்களூரு – நாகர்கோவில் இடையில், வந்தே பாரத் ரயில் வேண்டும் என்று, பயணியர் கோரிக்கை விடுத்தால், ரயில்வே அமைச்சகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்வோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
– நமது நிருபர் –
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்