டேராடூன்: கடந்த தீபாவளி (நவ.12) அன்று உத்தராகண்ட் சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்கள் 17 நாட்களுக்குப் பிறகு மீட்கப்பட்ட நிலையில், இன்றுதான் தங்களுக்கு உண்மையான தீபாவளி என்று சுரங்க தொழிலாளர்களின் குடும்பத்தினர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
உத்தராகண்ட் மாநிலத்தின் சில்க்யாரா சுரங்கத்தில் கடந்த 17 நாட்களாக சிக்கியிருந்த 41 தொழிலாளர்களையும் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் ஒருவர் பின் ஒருவராக பத்திரமாக மீட்டனர். இந்த அபார மீட்புப் பணியின் வெற்றியை நாடே மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகிறது. தொழிலாளர்கள் வெளியே வந்தபோது, சுரங்கத்தின் வெளியே காத்திருந்த அவர்களது உறவினர்கள், பொதுமக்கள், ஓட்டுநர்கள் என அனைவரும் கைகளைத்தட்டி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
சுரங்கத்தில் சிக்கியிருந்த உ.பி மாநிலம், லக்கிம்பூர் கேரி பகுதியைச் சேர்ந்த மன்ஜீத் லால் என்ற 17 வயது இளைஞரின் தந்தையான சவுத்ரி என்பவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இன்றுதான் எங்களுக்கு உண்மையான தீபாவளி. ஒருவழியாக என் மகன் வெளியே வந்துவிட்டான். என் மகனையும் மற்ற தொழிலாளர்களையும் வெளியே கொண்டுவர மலை வழிகொடுத்துவிட்டது. நான் அவனுக்காக புதிய துணிகள் கொண்டு வந்திருக்கிறேன்” என்றார். கடந்த ஆண்டு நடந்த ஒரு சுரங்க விபத்தில், சவுத்ரியின் மூத்த மகன் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
51 வயதாகும் கப்பார் சிங் நேகி என்ற தொழிலாளரின் சகோதரரான ஜெய்மால் என்பவர் கூறும்போது, “என் அண்ணன் தான் கடைசியாக வெளியே வந்தவர். வெளியே வரும்போது அவர் முகத்தில் புன்னகை இருந்தது. அவர் நம்பிக்கை இழக்கவில்லை. சுரங்கத்தின் உள்ளே இருந்தது சுலபமாக இல்லை என்று கூறினார். இது எங்களுக்கு தீபாவளி போன்ற நாள். மீட்புக்குழுவினருக்கு என்னுடைய வாழ்த்துகள். கடந்த 17 நாட்களாக நான் சுரங்கத்துக்கு வெளியே இரவையும் பகலையும் கழித்தேன். மீட்புப்பணி தாமதம் ஆனபோதும் நான் நம்பிக்கை இழக்கவில்லை” என்று தெரிவித்தார்.