சமீப காலமாக ஜிம், உடற்பயிற்சி, பாடி பில்டிங் என்று ஆண், பெண் பாகுபாடின்றி அனைவரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். இன்னும் சொல்லப்போனால் இன்றைய தலைமுறையினர் இதை வாழ்வின் ஒரு பகுதியாகவே மாற்றிவிட்டனர். சென்னை கீழ்ப்பாக்கம் அருகே உள்ள ஜிம் ஒன்றில் எடைக் குறைப்புக்கான உடற்பயிற்சியில் ஈடுபட்டபோது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு 26 வயது பெண் மருத்துவர் உயிரிழந்துள்ளார்.

உடற்பயிற்சியின்போது மாரடைப்பு ஏற்படுவதையும் இளவயதில் மாரடைப்பு ஏற்படும் செய்திகளையும் அடிக்கடி கேள்விப்படுகிறோம். மேற்கூறிய சம்பவத்தில் உயிரிழந்தவர் மருத்துவராக இருந்த நிலையில் தனக்கு மாரடைப்பு ஏற்பட்டதை கவனிக்கத் தவறினாரா என்ற கேள்வியுடன் மதுரையைச் சேர்ந்த இதய மருத்துவர் ஜெயபாண்டியனிடம் பேசினோம்:
”அவருக்கு நெஞ்சுப் பகுதியில் வலி ஏற்பட்டு இருக்கக்கூடும். அது மாரடைப்பு என்று உணர்வதற்குள் மரணம் நிகழ்திருக்கலாம். எனினும் பிரேதப் பரிசோதனையில் முழு விவரங்களைக் கண்டறிய முடியும்.

உடற்பயிற்சியின்போது மாரடைப்பு ஏன்?
மாரடைப்பு நிகழ்வதில் மூன்று விதங்கள் உள்ளன. முதலாவது, ரத்தக்குழாயில் திடீரென அடைப்பு ஏற்படுதல். ஏற்கெனவே மிதமான அளவில் சில இடங்களில் அடைப்புகள் இருந்திருக்கலாம். உடற்பயிற்சி செய்யும்போது அந்த அடைப்புகளில் அழுத்தம் ஏற்பட்டு மாரடைப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.
உடலில் பொட்டாசியம் குறைபாடு ஏற்படும்போது இதயம் இயங்குவதில் பிரச்னை ஏற்பட்டு மாரடைப்பு வர வாய்ப்புள்ளது. மூன்றாவது வகையானது மிகவும் அரிதானது. அதாவது பெருந்தமனியி்ல் ஏற்படும் அழுத்தம் அல்லது முறிவு காரணமாக மாரடைப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. இதன் காரணமாகவே உடற்பயிற்சியின் போது திடீர் மாரடைப்பு ஏற்படுகிறது.

இளம் வயதினருக்கு உடற்பயிற்சியின்போது மாரடைப்பு ஏற்படுவது என்பது கணிக்க முடியாத ஒன்று. அவர்களின் நெஞ்சுப்பகுதியில் சிறிது வலி ஏற்பட்டாலும் உடனடியாக மருத்துவமனையை நாடுவதே சிறந்தது.
உடற்பயிற்சி செய்வதற்கென்று சில வரையறைகள் உண்டு. குறிப்பிட்ட நேரம் மட்டுமே உடற்பயிற்சி செய்ய வேண்டும். நீண்ட நேரத்துக்கு, அதிக சிரமத்துடன் உடற்பயிற்சி செய்யும்போது, ஏற்கெனவே ரத்தத்தில் அடைப்பு இருந்தால் மாரடைப்பு ஏற்படலாம். அதிகப்படியான மனஅழுத்தத்தோடு உடற்பயிற்சி செய்தாலும் மாரடைப்பு ஏற்பட அதிகம் வாய்ப்புள்ளது.

படிப்பு, வேலை, சமூக வாழ்வியல் தரும் அழுத்தம் என மனஅழுத்தம், மனச்சோர்வு அதிகரித்திருப்பதால் பெண்களுக்கும் மாரடைப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனைத் தடுக்க மனநிலை, உடல் ஆரோக்கியம், உணவு என அனைத்திலும் சமநிலையைப் பின்பற்ற வேண்டும்” என்றார் அவர்.