மதுரை: “அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களின் பணி கல்வி கற்பிப்பதா? லேப்டாப்களை பாதுகாப்பதா?” என உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. தஞ்சாவூர் சசிகலா ராணி, மதுரை கலைச்செல்வி ஆகியோர் உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: ‘தஞ்சாவூர், மதுரை அரசு பள்ளிகளில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றோம். எங்களுக்கு வழங்கப்பட வேண்டிய பணப்பலன்கள் மற்றும் ஓய்வூதியத்தை நிறுத்தி வைத்து மாவட்ட கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார். பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்படும் லேப்டாப்கள் திருடப்பட்ட வழக்கு நிலுவையில் இருப்பதால் பணி ஓய்வு நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தனர். இதனை ரத்து செய்து ஓய்வூதியம் மற்றும் பணப் பலன்கள் வழங்க உத்தரவிட வேண்டும்’ என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுக்களை விசாரித்து நீதிபதி பட்டு தேவானந்த் பிறப்பித்த உத்தரவு: ”அரசு பள்ளிகளில் வைக்கப்பட்டிருந்த லேப்டாப்கள் மாயமான நிலையில், 2016-ல் 28 லேப்டாப்கள் போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அந்த லேப்டாப்கள் எங்கு, எப்போது, யாரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது என்ற தகவல்களை நீதிமன்றத்துக்கு தெரிவிக்க வேண்டும். லேப்டாப் வைத்திருந்த அறைக்கு ஏன் பாதுகாவலரை நியமிக்கவில்லை?
தலைமை ஆசிரியரின் பணியானது கல்வி கற்பிப்பதா அல்லது லேப்டாப்களை பாதுகாப்பதா? எதன் அடிப்படையில் தலைமை ஆசிரியர்களின் பண பலன்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது? லேப்டாப்களுக்கு பள்ளி தலைமை ஆசிரியர்கள் தான் பொறுப்பு என்பது எந்த விதியில் உள்ளது? இந்த வழக்கில் எல்காட் நிர்வாக இயக்குனர், தஞ்சை, மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் ஆகியோர் எதிர் மனுதாரர்களாக சேர்க்கப்படுகின்றனர். இவர்கள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். விசாரணை டிசம்பர் 7-க்கு ஒத்திவைக்கப்படுகிறது”என்று நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.