கடந்த 2020-ம் ஆண்டு பிரபல இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தனது வீட்டில் தற்கொலை செய்துகொண்டு இறந்த சம்பவம் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவரது தற்கொலைக்கான காரணம் இன்னும் சர்ச்சையாகவே இருக்கிறது. இதனிடையே சமீபத்தில் சுஷாந்த் சிங்கின் வீட்டை இந்தி நடிகையான அடா சர்மா வாங்கியிருக்கிறார் என்று செய்திகள் வெளியாகின.

இந்நிலையில் இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் அடா சர்மா. இதுகுறித்து பேசியவர், “நான் தற்போது வசிக்கும் வீடே எனக்குக் கோயில் போன்றது. சிறுவயதிலிருந்து நான் இந்த வீட்டில்தான் வாழ்கிறேன். வேறு வீட்டுக்குக் குடிபெயர்ந்தால் நிச்சயம் சொல்கிறேன். தேவையின்றி ஏன் இதுபோன்ற வதந்திகளைப் பரப்புகிறார்கள் என்று புரியவில்லை. நடிகை என்பதால் வதந்திகள் என் வாழ்க்கையில் ஓர் அங்கம் போல் மாறிவிட்டன.
என்னைப் பற்றி நிறையத் தவறான வதந்திகள் பரப்பப்படுகின்றன. ஆனால் அதை நான் கண்டுகொள்வது இல்லை. ரசிகர்களுக்கு என்னைப் பற்றித் தெரிந்துகொள்ள ஆர்வம் இருந்தாலும் எனது சொந்த விஷயங்களை எந்த அளவு பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதில் எனக்கு ஓர் எல்லை இருக்கிறது” என்று தெரிவித்திருக்கிறார்.

அடா சர்மா தமிழில், சிம்புவின் ‘இது நம்ம ஆளு’ படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியிருக்கிறார். ‘சார்லி சாப்ளின் 2’ படத்தில் நடித்திருந்த அவர், ‘தி கேரளா ஸ்டோரி’ படத்தின் மூலம் பிரபலமடைந்தார். தொடர்ந்து தமிழ், தெலுங்கு, இந்தி என்று நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.