புதிய கல்விக் கொள்கையில் பரீட்சை திகதிகள் மற்றும் பெறுபேறுகள் வெளியிடப்படும் திகதிகள் கட்டாயமாக உட்படுத்தப்படவுள்ளன என்றும், கல்வி தொடர்பான அனைத்து விடயங்களுக்கும் தேவையான தீர்வுகளும் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சரவைப் பேச்சாளர், வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (28) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தான் கல்வி அமைச்சராக இருந்த காலத்தில் தரம் 5 புலமைப்பரிசில், க.பொ.த சாதாரண தரம் மற்றும் உயர்தரப் பரீட்சை முதலான 03 பிரதான பரீட்சைகளின் பெறுபேறுகள் மிக விரைவாக வெளியிடப்பட்டதாகவும், கொவிட் தொற்று பரவலைத் தொடர்ந்து, முழுக் கல்வி வலையமைப்பும் வீழ்ச்சியடைந்ததாகவும் அவர் சுட்டிக் காட்டினார்.
அதன் பின்னர், பரீட்சைகளை நடத்துவது குறித்து பல்வேறு தரப்பினர் பல்வேறு கருத்துகளை கூறி பல்வேறு பிரச்சாரங்கள், போராட்டங்கள், நீதிமன்ற உத்தரவுகள் போன்றவற்றை பெறுதல் என பல்வேறு காரணங்களால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது என்றும் விளக்கமளித்தார்.
பரீட்சை பெறுபேறுகளை விரைவில் வெளியிடுவதற்கான முறைமையொன்றை தயாரிப்பதற்கு தானும் பரீட்சை திணைக்களமும் கடுமையாக உழைத்து வருவதாக கல்வி அமைச்சர் தொடர்ந்தும்; பாராளுமன்றத்தில் அறிவித்து வருவதாகவும் அமைச்சர் பந்துல குணவர்தன நினைவு கூர்ந்தார்.
ஆனால் அவர்களின் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட காரணிகளால் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும், ஜனாதிபதி உட்பட 25 நிபுணர்களைக் கொண்ட அமைச்சரவை உபகுழுவின் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை கருத்திற் கொண்டு கல்விக்கான புதிய தேசிய கொள்கையொன்று அமுல்படுத்தப்படுவதாகவும் அமைச்சர் மேலும்; கூறினார்.