வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி,முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில், கேரளா அரசு கட்டி வரும் வாகன நிறுத்துமிடம் தொடர்பான பிரச்னையில், கூட்டு ஆய்வை நடத்தும்படி, இந்திய நில அளவை துறைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
கேரள மாநிலம் இடுக்கியில் உள்ள முல்லைப் பெரியாறு அணையை, தமிழக அரசு பராமரித்து வருகிறது.
இந்த அணையை ஒட்டியுள்ள நீர்த்தேக்கப் பகுதியில், பிரமாண்ட வாகன நிறுத்துமிடத்தை கேரள அரசு கட்டி வருகிறது.
இதை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
ஏற்கனவே செய்யப்பட்ட ஒப்பந்தங்களின்படி, தங்களுக்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ள அந்த இடத்தில் வாகன நிறுத்துமிடம் கட்டுவதற்கு தடை கேட்டு தமிழக அரசு வழக்கு தொடர்ந்துள்ளது.
இந்த வழக்கை விசாரித்த, உச்ச நீதிமன்றம், கூட்டு ஆய்வு செய்வது தொடர்பாக, தமிழக மற்றும் கேரள அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு, நீதிபதிகள் அபய் ஓகா, பங்கஜ் மிட்டல் அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அமர்வு பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுஉள்ளதாவது:
கேரள அரசு வாகன நிறுத்துமிடம் அமைத்து வரும் இடம், ஒப்பந்தத்தின் அடிப்படையில் தமிழகத்துக்கு குத்தகைக்கு விடப்பட்ட இடமா என்பது குறித்து ஆராய வேண்டும்.
இதற்காக, ‘சர்வே ஆப் இந்தியா’ எனப்படும் இந்திய நில அளவைத் துறை அல்லது அதனால் நியமிக்கப்படும் அதிகாரிகள், தமிழக மற்றும் கேரள அரசு அதிகாரிகளுடன் இணைந்து கூட்டு ஆய்வை நடத்தி, மூன்று மாதங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
வழக்கு விசாரணை அடுத்த ஆண்டு மார்ச் 11க்கு ஒத்திவைக்கப் பட்டது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement