நியூயார்க் :அமெரிக்காவில், குருத்வாராவுக்குச் சென்ற அந்நாட்டுக்கான இந்திய துாதர் தரன்ஜித் சிங் சந்துவை, காலிஸ்தான் ஆதரவாளர்கள் முற்றுகையிட்ட சம்பவத்துக்கு, ‘சீக்ஸ் ஆப் அமெரிக்கா’ அமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின், நியூயார்க் மாகாணத்தின் லாங் ஐலேண்டு என்ற இடத்தில் உள்ள சீக்கிய குருத்வாராவில், அந்நாட்டுக்கான இந்திய துாதர் தரன்ஜித் சிங் சந்து சமீபத்தில் வழிபாடு நடத்தினார். அப்போது, ஒருசில காலிஸ்தான் ஆதரவாளர்கள், அவரை முற்றுகையிட்டு, காலிஸ்தான் புலிப்படை தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை குறித்து கேள்வி எழுப்பினர்.
அவர்களை குருத்வாராவில் இருந்து, பாதுகாப்பு அதிகாரிகள் வெளியேற்றினர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், இந்திய துாதர் தரன்ஜித் சிங் சந்துவை காலிஸ்தான் ஆதரவாளர்கள் முற்றுகையிட்ட சம்பவத்துக்கு, சீக்ஸ் ஆப் அமெரிக்கா அமைப்பு கண்டனம் தெரிவித்து உள்ளது.
இது குறித்து, அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:
இந்திய துாதரை முற்றுகையிட்ட சமூக விரோதிகள் மீது, குருத்வாரா நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சீக்கிய சமூகத்தினர் எவ்வித அச்சமுமின்றி குருத்வாராவுக்கு சென்று வருவதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.
குருத்வாராக்கள் வழிபாட்டுத் தலங்கள் என்பதால், தனிப்பட்ட அரசியல் பார்வைகளிலிருந்து விலக்கி வைக்க வேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement