வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
வாஷிங்டன்: பிரபல அமெரிக்க முதலீட்டாளரும், உலக பெரும் பணக்காரர்களில் ஒருவருமான வாரன் பபெட்டின் நீண்டகால நண்பரும் வணிகப் பார்ட்னருமான சார்லி முங்கர், நேற்று காலமானார். அவருக்கு வயது 99.
”வாரன் பபெட்டின் பெர்க்ஷயர் ஹாத்வே நிறுவனத்தின் துணை தலைவராக பல தசாப்தங்களாக பணியாற்றிய சார்லி முங்கர் கலிபோர்னியா மருத்துவமனையில் நிம்மதியாக இறந்தார்” என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. அவரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள வாரன் பபெட் “சார்லியின் உத்வேகம், ஞானம் மற்றும் பங்கேற்பு இல்லாமல் பெர்க்ஷயர் ஹாத்வே தற்போதைய நிலைக்கு கட்டமைக்கப்பட்டிருக்க முடியாது” என்று புகழஞ்சலி சூட்டி உள்ளார்.
பபெட்டைப் போலவே, சார்லி முங்கர் நெப்ராஸ்காவின் ஒமாஹாவில் பிறந்து வளர்ந்தார். 1959ல் சந்தித்துக்கொண்ட இருவரும், 60 ஆண்டுகளுக்கும் மேலாக நண்பர்களாக இருந்து வந்தனர். சார்லி முங்கர் 1978ல் பெர்க்ஷயர் ஹாத்வேயில் துணைத் தலைவராக சேர்ந்தார். ஒரு சிறிய ஜவுளி நிறுவனத்தில் இருந்து ஒரு பிரம்மாண்டமான நிறுவனமாக மாற்ற அவர் உதவினார். அந்நிறுவனத்திற்கு இப்போது 780 பில்லியன் டாலருக்கும் அதிகமான மதிப்பு உள்ளது.
சார்லி முங்கர் தனது வாழ்நாளில் தனது சொத்துகளின் பெரும்பகுதியை தொண்டுக்காக நன்கொடையாக அளித்துள்ளார். சார்லி முங்கர் பெர்க்ஷயர் ஹாத்வேயில் இருந்து அதிகாரப்பூர்வமாக ஓய்வு பெறவில்லை, ஜனவரி 1, 2024 அன்று 100 வயதை எட்டவிருந்த நிலையில் அவரின் இறப்பு செய்தி வந்துள்ளது. அவரின் மறைவுக்கு பல்வேறு முதலீட்டாளர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement