மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் கட்சி, மூத்த தலைவர் அஜித் பவார் தலைமையில் இரண்டாக உடைந்துள்ளது. தற்போது தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சின்னம் மற்றும் கட்சியின் பெயர் யாருக்கு என்ற போட்டி சரத் பவார் மற்றும் அஜித் பவார் இடையே எழுந்துள்ளது. இரு தரப்பினரும் இதற்காக தேர்தல் கமிஷனில் மனு கொடுத்து இருக்கின்றனர். அம்மனு மீது விசாரணை நடந்து வருகிறது. தேர்தல் கமிஷனில் நடக்கும் விசாரணை தொடர்பாக இரு தரப்பினரும் பல்வேறு கருத்துக்களை கூறி வருகின்றனர். அதேசமயம் வரும் மக்களவை தேர்தலில் முதல் முறையாக அஜித் பவார் தனது சித்தப்பாவை எதிர்த்து போட்டியிட இருக்கிறார் என்ற தகவலும் வெளியாகி இருக்கிறது.
மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க மகாராஷ்டிராவில் 26 தொகுதியில் போட்டியிடும் என்று துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்து இருந்தார். பாக்கி இருக்கும் 22 தொகுதியில் சிவசேனாவும் தேசியவாத காங்கிரஸ் கட்சியும் போட்டியிடும் என்றும் அவர் குறிப்பிட்டு இருந்தார். இதையடுத்து தங்களது கட்சி பாராமதி தொகுதி உட்பட 11 தொகுதியில் போட்டியிட விரும்புவதாக அஜித் பவார் தெரிவித்துள்ளார். அஜித் பவார் தெரிவித்துள்ள சில தொகுதிகள் சரத்பவார் வசம் உள்ளதாகும். அதில் பாராமதி தொகுதி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும். இதில் முதலில் சரத்பவார் போட்டியிட்டார்.

அதன் பிறகு அத்தொகுதியில் சரத்பவார் மகள் சுப்ரியா சுலே எம்.பி.யாக இருக்கிறார். வரும் தேர்தலில் பாராமதியில் சுப்ரியாவை எதிர்த்து அஜித் பவார் தனது கட்சி சார்பாக வேட்பாளரை நிறுத்த மாட்டார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அத்தொகுதியில் போட்டியிடுவோம் என்று தெரிவித்துள்ளார். அஜித் பவார் மும்பை அருகில் நடந்து வரும் கட்சி பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகையில், ”மக்களவை தேர்தல் மார்ச் முதல் வாரத்தில் அறிவிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கிறோம்.

இத்தேர்தலில் நாங்கள் சிரூர், சதாரா, ராய்கட், பாராமதி தொகுதியில் போட்டியிடுவோம். இத்தொகுதியில் போட்டியிட நாங்கள் ஏற்கனவே தயாராகிவிட்டோம். இதர தொகுதிகள் குறித்து முதல்வர் ஷிண்டே மற்றும் பா.ஜ.க.வுடன் பேசி முடிவு செய்வோம். தொகுதி பங்கீடு தொடர்பாக ஏற்கனவே முதல் கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. ஐந்து மாநில தேர்தல் பணிகள் முடிந்த பிறகு மீண்டும் இது குறித்து பேசுவோம்.
கடந்த மே மாதம் சரத் பவார் கட்சி தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தது வெறும் கண்துடைப்பு ஆகும். அது ஒரு நாடகம் என்றே பலரும் நினைத்தனர். பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துவிட்டு ஜிதேந்திர அவாட் மற்றும் ஆனந்த் பராஞ்பேயை அழைத்து பெண்கள் மற்றும் தொண்டர்களை அழைத்து வந்து என்னிடம் ராஜினாமாவை திரும்ப பெறும்படி கூறுங்கள் என்று கேட்டுக்கொண்டார். பதவியை திரும்ப பெறுவதாக இருந்தால் ஏன் ராஜினாமா செய்யவேண்டும். முதலில் ராஜினாமா செய்த போது, எனது சித்தப்பாதான்(சரத் பவார்) பா.ஜ.க. கூட்டணி அரசில் சேரும்படி என்னிடம் கேட்டுக்கொண்டார். இது வெளியில் தெரியாது. ஆனால் பின்னர் ராஜினாமா முடிவை திரும்ப பெற்றுக் கொண்டார்” என்றார்.

அஜித் பவாரின் இந்த கருத்து மகாராஷ்டிராவில் எதிர்க்கட்சி கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது. சரத் பவார் தன்னை மதசார்பற்ற தலைவராக அறிவித்துக் கொள்வதோடு எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். ஆனால் அஜித் பவார் இப்போது தெரிவித்து இருக்கும் கருத்துக்கள் எதிர்க்கட்சிகளுக்கு அதிர்ச்சியளிப்பதாக அமைந்துள்ளது. ஏற்கனவே தொகுதி பங்கீடு தொடர்பாக எதிர்க்கட்சி கூட்டணியில் ஒருமித்த கருத்து எட்டப்படாமல் இருக்கிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.