நாடு விமர்சனம்: அவசியமான சமூகப் பிரச்னைகளைப் பேசும் படம்; பிக் பாஸ் தர்ஷன் ஸ்கோர் செய்கிறாரா?

கொல்லிமலையைச் சுற்றியுள்ள பல கிராமங்களுக்கு ஒரே ஒரு ஆரம்பச் சுகாதார மையம்தான் இருக்கிறது. அங்கு வருகிற மருத்துவர்கள் எல்லாம் உடனே பணியிட மாற்றம் வாங்கிச் செல்கிறார்கள். மருத்துவர் இல்லாததால் கடும் அவதியுறும் பழங்குடி மக்கள் உயிர்ப்பலியைச் சந்திக்க நேரிடுகிறது. இச்சுழலில் போராட்டத்தில் இறங்கும் மக்களைச் சமாதானம் செய்ய மாவட்ட ஆட்சியர் வருகிறார். அவர் மருத்துவரை நியமனம் செய்கிறேன், ஆனால் அவரை நன்றாக உபசரித்து பணியிட மாற்றம் வாங்காமல் சிறப்பாகப் பார்த்துக்கொள்வது உங்கள் பொறுப்பு என்று சொல்லிவிடுகிறார். இதன் பின்னர் நாயகன் மாரி (தர்ஷன்) தன் ஊர் மக்களோடு சேர்ந்து புதிதாக வரும் மருத்துவரைத் தக்கவைத்துக்கொள்ள என்னென்ன செய்கிறார்கள், மருத்துவர் அவர்கள் ஊரிலே தங்கினாரா என்பதே ‘நாடு’ படத்தின் கதை.

கிராமத்துக்காக ஓடி ஓடி உழைப்பது, உணர்வுபூர்வமான நீண்ட வசனங்கள் பேசுவது, வெள்ளந்தி மனிதர்களுக்குள் இருக்கிற அப்பாவித்தனத்தை வெளிப்படுத்துவது எனத் தனக்குக் கொடுக்கப்பட்ட பணியைச் சிறப்பாகச் செய்துள்ளார் கதாநாயகன் தர்சன். குறிப்பாக உடைந்து அழ வேண்டும், ஆனால் சத்தம் வெளியே வரக்கூடாது என்கிற சூழலில் அவர் வெளிப்படுத்துகிற சத்தமில்லா அழுகை – உருக்கம்!

நாடு விமர்சனம்

தனது முன்முடிவுகளிலிருந்து படிப்படியாக மாற்றம் அடைகிற மருத்துவராக மகிமா நம்பியார் நடித்துள்ளார்; நடிப்பில் குறையேதுமில்லை. குற்றவுணர்ச்சியும் அதிலிருந்து மீண்டெழும் முயற்சியிலும் இருக்கும் கனமான கதாபாத்திரத்துக்கு மறைந்த நடிகர் ஆர்.எஸ்.சிவாஜி உயிர் தந்துள்ளார். நெகிழ்ச்சியும் உற்சாகமும் கலந்த ஊர்த்தலைவராக வரும் சிங்கம்புலி தனது பணியைச் சிறப்பாகச் செய்துள்ளார். அவரது மகனாக நடித்துள்ள இன்பா ரவிக்குமார் போடும் டைமிங் ஒன்-லைனர்கள் கலகல! இது போக ஊர்மக்களாக வரும் அனைவருமே கேமராவை மறந்து யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்துகிறார்கள்.

ஒளிப்பதிவில் எழில்மிகு மலையின் வளைவுகளையும், ஊரின் பச்சை பசுமையும் சிறப்பாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் கே.ஏ.சக்திவேல். இருந்தும் பழங்குடிகளின் வீட்டுக்குள்ளேயே எடுக்கப்பட்ட காட்சிகளில் ஒரு வகையில் செயற்கையான ஒளியுணர்வு எட்டிப்பார்க்கிறது. படத்தொகுப்பில் மருத்துவம் பார்க்க மிக நீண்ட தூரம் செல்கிறார்கள் என்பதைக் கொண்டை ஊசி வளைவுகளைக் கொண்டு மிகச் சாமர்த்தியமாக உணர்த்திய விதத்தில் படத்தொகுப்பாளர் ‘பி.கே’ சபாஷ் சொல்ல வைக்கிறார். ஆனால் அதே கொண்டை ஊசி வளைவுகள் போல நீண்டு கொண்டே சென்ற இரண்டாம் பாதியின் நீளத்தைச் சற்றே குறைத்திருக்கலாம்.

நாடு விமர்சனம்

பின்னணி இசையும், பாடல்களும் கதையின் போக்கைப் பாதிக்கவில்லை, அதே நேரத்தில் மனதில் பெரிதாகப் பதியவுமில்லை. இரண்டாம் பாதியில் வரும் மேற்கத்தியப் பாணியிலான பாடல் ‘இது என்னது இது?’ எனப் பக்கத்தில் இருப்பவரைப் பார்த்துக் கேட்க வைக்கிறது. மலைக்கு நடுவே இருக்கிற ‘டீ டே’, ஆரம்பச் சுகாதார மையம் எனக் கலை இயக்குநர் ‘லால்குடி’ இளையராஜா கலை இயக்கத்தைக் குறையில்லா வண்ணம் செய்துள்ளார்.

படம் ஆரம்பித்த உடனே தங்கள் ஊரை நேசிக்க வைக்க ஊர்மக்கள் செய்யும் வேலைகள் ஒருபுறம் ரகளை என்றால், மறுபுறம் உயிர் போகும் அவசர உதவிகள் கூட அவர்களுக்குத் தாமதமாகத்தான் கிடைக்கின்றன என்று அதற்கு இணையாக நகரும் காட்சிகள் கசப்பான உண்மை. ‘நீங்கலாம் இருக்குறதாலதான் மழை பெய்யுது’ என்று கதையின் போக்கில் வரும் யதார்த்த வசனங்கள் போல, பழங்குடி மக்களின் மத்தியில் இருக்கும் குழந்தை திருமணத்தை எதிர்க்கும் காட்சிகளும் யதார்த்தமாகச் சொல்லப்பட்டிருப்பது சிறப்பு! அதே போல நீட் போன்ற மருத்துவத் தேர்வுகள் எழுத சமூக அளவில் இருக்கும் மலையளவு வித்தியாசத்தை எளிய காட்சிமொழியாக தந்த இயக்குநர் எம்.சரவணனுக்குப் பாராட்டுகள்!

புலி வருகிற காட்சிகளின் VFX சற்று மோசமாக இருந்தாலும், பெரிதாகக் குறைசொல்ல முடியாத அளவில் முதல் பாதி முடிகிறது. ஆனால் இரண்டாம் பாதியில்தான் உரம், இயற்கை விவசாயம், இரட்டையர்கள் என்று சம்பந்தமே இல்லாமல் எங்கெங்கோ விலகிச் சென்று ஏறிய மலையிலிருந்து சறுக்குகிறது திரைக்கதை. அதே போல வழக்கமாக அமெரிக்க மாப்பிள்ளை என்று வைக்கப்படும் டெம்ப்ளேட் காட்சியை ஒரு படி மேலே சென்று அமெரிக்காவிலிருந்தே மாப்பிள்ளை என்று நாயகியின் வீட்டுக்கு அழைத்துச் செல்வது கொடுமை. அதேபோல, ஊருக்கு வந்த மருத்துவரின் அப்பா இவர்தான் என்ற ட்விஸ்ட், ‘அந்த குழந்தையே நீங்கதான் சார்’ ரகம்! இதையெல்லாம் தவிர்த்திருக்கலாமே?!

நாடு விமர்சனம்

மொத்தத்தில் `உங்களைச் சுற்றி இருக்கும் வசதிகளைப் பொறுத்தது மட்டும் இந்நாடு கிடையாது. அதைத் தாண்டிய அடிப்படை வசதிகள் கூட இல்லாதவர்களும் வாழ்வதே இந்நாடு!’ எனச் சொல்ல முற்பட்டிருக்கிறார்கள். இந்தக் கருத்து சரியாக இருந்தாலும் இரண்டாம் பாதியின் திரைக்கதையில் இன்னும் சிரத்தை எடுத்திருந்தால் இந்தப் படம் இன்னும் செழிப்பான `நாடாக’ இருந்திருக்கும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.