துமகூரு : பட்டம் வாங்கிய கேரளாவை சேர்ந்த மருத்துவ மாணவர், சில நிமிடங்களிலேயே பாம்பு கடித்து உயிரிழந்த சோக சம்பவம், துமகூரில் நடந்துள்ளது.
கேரளாவின் திருச்சூர் பகுதியை சேர்ந்தவர் ஆதித் பாலகிருஷ்ணன், 21. இவர், துமகூரில் உள்ள உள்துறை அமைச்சர் பரமேஸ்வருக்கு சொந்தமான ஸ்ரீ சித்தார்த்தா மருத்துவ கல்லுாரியில் எம்.பி.பி.எஸ்., படித்தார்.
படிப்பு மாணவர்களுக்கு, கடந்த நவ., 29ம் தேதி பட்டமளிப்பு விழா நடந்தது. அவரது தாய், உறவினர்கள் வந்திருந்தனர். அவரும் பட்டம் பெற்று, நண்பர்களுடன் உற்சாகமாக இருந்தார்.
பட்டம் பெற்ற பின், மாணவர்கள் தங்கும் விடுதி வளாகத்தில் உள்ள வாகனங்கள் நிறுத்தும் இடத்தில், அவரை பாம்பு கடித்துள்ளது. இதை அறியாத அவர், ஜாலியாக நண்பர்கள், உறவினர்களுடன் பேசி விட்டு, துாங்குவதற்காக அறைக்கு சென்றுள்ளார்.
அப்போது, கீழே சரிந்து விழுந்துள்ளார். உடனே அவரை மீட்டு, அவர் படித்த மருத்துவ கல்லுாரி, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், கால் பகுதியில் பாம்பு கடித்ததற்கான அடையாளம் இருப்பதாக கூறினர்.
பிரேத பரிசோதனையின் போதும், உடலில் விஷம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கேரளாவுக்கு சென்று கொண்டிருந்த அவரது தாய், உறவினர்கள் தகவலறிந்து, துமகூருக்கு வந்தனர்.
உடல் சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டது. தந்தை, இத்தாலியில் இருந்து நேற்று வந்ததடையடுத்து, இன்று இறுதி சடங்கு நடத்தப்படுகிறது.
பட்டம் பெற்று சில நிமிடங்களிலேயே பாம்பு கடித்து மாணவர் இறந்த செய்தி அறிந்து, சக மாணவர்கள் கதறி அழுதனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்