பல மாதங்களாக எதிர்பார்க்கப்பட்ட மிஷ்கின் – விஜய் சேதுபதி புராஜெக்ட், இப்போது டேக் ஆஃப் ஆகிவிட்டது. படத்தின் டைட்டில் `ட்ரெயின்’. இவர்களது கூட்டணி எப்படி உருவானது, படத்தில் யாரெல்லாம் இருக்கிறார்கள், படப்பிடிப்பு எங்கு நடக்கிறது என்பது குறித்து விசாரித்ததில் கிடைத்த தகவல்கள் இனி…
இயக்குநர் மிஷ்கின், ஆண்ட்ரியாவை வைத்து ‘பிசாசு 2’வை இயக்கி முடித்திருக்கிறார். இப்படம் அடுத்தாண்டு வெளியாகவிருக்கிறது. இதற்கிடையே அவர் நடிகராகவும் சில படங்களில் நடித்தார். இசையமைப்பாளராகவும் அவதாரம் எடுத்திருக்கிறார். இந்நிலையில் ‘பிசாசு 2’ படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார் விஜய் சேதுபதி. இது அவரே கேட்டு வாங்கி நடித்த வாய்ப்பு என்றும் சொல்லப்படுகிறது. அதன்பிறகு இவர்கள் இருவருக்குமான நட்பு இன்னும் இறுக்கமானது. சென்ற ஆண்டே இந்தக் கூட்டணி இணையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், விஜய் சேதுபதியின் இந்திப்பட கமிட்மென்ட்களால், இப்போதுதான் மிஷ்கின் படத்திற்குள் வரமுடிந்திருக்கிறது.

இந்த ‘ட்ரெயின்’ படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். ஒரு ராத்திரியில் ரயிலில் நடக்கும் சம்பவங்கள்தான் படத்தின் கதை என்கிறது கோடம்பாக்கம். இந்தப் படத்தில் விஜய் சேதுபதியின் ஜோடியாக டிம்பிள் ஹயாதி நடிக்கிறார். இந்தி ‘அட்ராங்கி ரே’, பிரபுதேவாவின் ‘தேவி 2’, விஷாலின் ‘வீரமே வாகை சூடும்’, ‘டைகர் நாகேஸ்வரராவ்’ எனப் பல படங்களில் நடித்தவர் டிம்பிள்.
இவர்களுடன் நாசர், வினய் ராய், பாவனா, சம்பத் ராஜ், பப்லு பிருத்விராஜ், கே.எஸ்.ரவிக்குமார், யூகி சேது, கணேஷ் வெங்கட்ராமன், கனிஹா, தியா சீதிபள்ளி, சிங்கம் புலி, ஸ்ரீரஞ்சனி, அஜய் ரத்னம், திரிகுன் அருண், ராச்சல் ரபேக்கா எனப் பலர் நடிக்கவுள்ளனர்.
‘டெவில்’ படத்தைத் தொடர்ந்து இந்தப் படத்திற்கும் இசையமைக்கிறார் மிஷ்கின். ‘விசில்’, ‘இவன்’ படங்களின் ஒளிப்பதிவாளரான பௌசியா பாத்திமா ஒளிப்பதிவு செய்கிறார்.

நேற்று சென்னையில் உள்ள ஸ்டூடியோ ஒன்றில் தொடங்கிய படப்பிடிப்பு, விறுவிறுவென நடந்து வருகிறது. செட்கள் அமைக்கப்பட்டுள்ளன. விஜய் சேதுபதி நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. ஒரே கட்ட படப்பிடிப்பாக இது நடக்கும் என்கிறார்கள்.