ஐபிஎல் 2024 ஏலம் இன்னும் 16 நாட்களில் துபாயில் மிக பிரம்மாண்டமாக நடைபெற இருக்கிறது. டிசம்பர் 19 ஆம் தேதி நடைபெறும் இந்த மினி ஏலத்தில் யாரை தட்டி தூக்கலாம் என அனைத்து ஐபிஎல் அணிகளும் ஏற்கனவே சீக்ரெட்டாக சில பிளேயர்களை டார்கெட் செய்து இருக்கின்றன. குறிப்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தென்னாப்பிரிக்கா பந்துவீச்சாளரான ஜெரால்டு கோட்ஸியை பெரும் தொகை கொடுத்துகூட இந்த ஏலத்தில் எடுக்க தயாராக இருக்கிறது. ஏனென்றால் அவர் தென்னாப்பிரிக்காவில் நடைபெறும் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணியிலும், அமெரிக்காவில் நடைபெறும் 20 ஓவர் லீக் போட்டியில் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணியிலும் விளையாடிக் கொண்டிருக்கிறார்.
ஏற்கனவே தங்களுக்கு சொந்தமான இரண்டு அணிகளில் அவரை விளையாட வைத்துக் கொண்டிருப்பதால் இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் போட்டியிலும் அவரை ஏலத்தில் தட்டி தூக்க தயாராக இருக்கிறது. ஆனால் அதற்கு கட்டையை போட்ட 9 ஐபிஎல் அணிகளும் தயாராக இருக்கின்றன. குறிப்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எப்போதும் தலைவலியை கொடுக்கும் மும்பை இந்தியன்ஸ் அணி ஜெரால்டு கோட்ஸியை தட்டி தூக்க தயாராக இருக்கிறது. ஆனால் கையில் பணம் குறைவாக இருப்பதால் அவருக்கு அதிக தொகையை செலவு செய்யுமா? என்ற கேள்வி இருக்கிறது.
இந்த இடத்தில் தான் ஆர்சிபி மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் உள்ளே வருகின்றன. அவர்களும் ஜெரால்டு கோட்ஸியை எடுக்கலாம் என்ற முடிவில் இருக்க ஐபிஎல் ஏலத்தில் எப்போது கவனிக்கப்படும் டெல்லி அணியும் அவருக்கு ஸ்கெட்ச் போட்டு வைத்திருக்கிறது. இதனால் இந்த ஐபிஎல் ஏலத்தில் அதிக தொகைக்கு ஏலம் போக ஜெரால்ட் கோட்ஸிக்கு வாய்ப்பு இருக்கிறது. மிகப் பெரிய ஜாக்பாட் அடிக்கும் என்ற கனவிலும் அவர் இருக்கிறாராம்.
அண்மையில் நடந்து முடிந்த உலக கோப்பை கிரிக்கெட் போட்டியிலும் தென்னாப்பிரிக்கா அணிக்காக களமிறங்கிய அவர் 20 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். இதன் மூலம் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர்கள் பட்டியலிலும் அவரது பெயர் இடம்பிடித்திருந்தது. அதனால் தான் ஜெரால்டு கோட்ஸியை ஏலத்தில் எடுக்க ஐபிஎல் அணிகள் ஸ்கெட்ச் போட்டு காத்திருக்கின்றன.