மூணாறு : கேரளாவைச் சேர்ந்த, இரண்டு கைகளும் இல்லாத ஜிலுமோள், ஆறு ஆண்டுகள் போராட்டத்திற்கு பின், ‘டிரைவிங் லைசென்ஸ்’ பெற்றார்.
கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம் தொடுபுழா அருகே கரிமண்ணுார் நெல்லானிக்காடு பகுதி யைச் சேர்ந்த தாமஸ், அன்னகுட்டி தம்பதியின் இரண்டாவது மகள் ஜிலுமோள், 32.
இரண்டு கைகளும் இன்றி பிறந்தார். மன உறுதி படைத்த ஜிலுமோள் தனக்கான பணிகளை தாமே செய்து வருகிறார்.
அவருக்கு கார் ஓட்ட வேண்டும் என்ற ஆசை தலை துாக்கியது. எர்ணாகுளத்தில் பயிற்சி பள்ளியில் டிரைவிங் கற்றார்.
தொடுபுழா ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் டிரைவிங் லைசென்ஸ் பெற, 2017ல் விண்ணப்பித்தபோது கைகள் இல்லை எனக்கூறி நிராகரித்தனர்.
ஜிலுமோள் கேரள உயர் நீதிமன்றத்தை அணுகினார்.
விண்ணப்பத்தை பெற்று நடவடிக்கை எடுக்குமாறு மோட்டார் வாகன துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இருப்பினும், காரை ஜிலுமோள் கால்களால் ஓட்டுவதற்கு வசதியாக வடிவ மாற்றம் செய்யும்படி மோட்டார் வாகன துறையினர் தெரிவித்தனர்.
வடிவத்தை மாற்றிய போதும் லைசென்ஸ் வழங்க மறுத்தனர்.
இப்பிரச்னையில் மாநில மாற்றுத் திறனாளி ஆணையம் தலையிட்டது. இதையடுத்து ஜிலுமோளுக்கு டிரைவிங் லைசென்ஸ் வழங்கப்பட்டது.
”ஆசியா, ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய கண்டங்களில் இது போன்று டிரைவிங் லைசென்ஸ் பெற்ற முதல் பெண் ஜிலுமோள்,” என, கேரள மாற்றுத் திறனாளி ஆணையர் பஞ்சாபகேசன் தெரிவித்தார்.
”முடியாதது எதுவும் இல்லை என்பதை உணர வேண்டும். எனக்கு கைகள் இல்லாவிட்டாலும் அதற்கு இணையாக வலிமையான கால்கள் உள்ளன,” என, ஜிலுமோள் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்