கோவை: தமிழ்நாடு வேளாண் பல்கலையின், இளநிலை பொறியியல் மாணவர்கள் விவசாய நிலங்களில் பறவைகளை விரட்ட, ட்ரோன் வடிவமைப்பை உருவாக்கியுள்ளனர்.
இதற்கு, மத்திய அரசின் காப்புரிமைகள், வடிவமைப்புகள் மற்றும் வர்த்தக முத்திரைகளின் கட்டுப்பாட்டு அலுவலகம் சார்பில், வடிவமைப்புக்கான காப்புரிமை வழங்கப்பட்டுள்ளது.
விவசாயிகளின் மகசூல் இழப்பில், பறவைகளின் பங்கு பெரிது. பறவைகளால், 25 முதல் 65 சதவீதம் வரை பயிர்களில் சேதம் ஏற்பட்டு, விவசாயிகள் பாதிக்கப் படுகின்றனர்.
பறவைகளை விரட்ட, ரிப்ளக்டிவ் பேப்பர் பிளேட், ரிப்ளக்டிவ் ரிப்பன், பலுான்கள் போன்ற பல தொழில்நுட்பங்கள சந்தையில் உள்ளன.
இத்தொழில்நுட்பங்களுக்கு, ஆரம்பத்தில் பயம் கொள்ளும் பறவைகள், நாளடைவில் பயப்படுவதில்லை; மீண்டும் சேதப்படுத்துவதை துவங்கிவிடுகின்றன. இதற்கு தீர்வு காணும் வகையில், வேளாண் பல்கலை பண்ணை இயந்திரவியல் பொறியியல் துறை சார்பில், இளநிலை மாணவர்கள் டிரோன் வாயிலாக, பறவை விரட்டும் வடிவமைப்பை கண்டறிந்து காப்புரிமை பெற்றுள்ளனர்.
மாணவர்கள் வழிகாட்டி பேராசிரியர் சுரேந்திரகுமார் கூறுகையில், ”வடிவமைப்புக்கான காப்புரிமை பெற்றுள்ளோம். தொடர்ந்து, மாதிரி டிரோன் உருவாக்கி, அதை பல்கலை வயல்களில் பறக்கவிட்டு சோதனை செய்து வருகிறோம்.
இந்த டிரோன், பறவைகளை விரட்டி செல்லும். ஒவ்வொரு முறையும் விதவிதமான ஒலியை எழுப்பி துரத்தி செல்வதால், பறவைகள் பயந்து ஓடும். இதனை முழுமையான, ஒழுங்கான வடிவம் கொடுக்க ஆராய்ச்சி செய்கிறோம்.
அடுத்தகட்டமாக, பறவைகள் அமரும் போது, சென்சார் தொழில்நுட்பம் வாயிலாக, டிரோன் தாமாக பறந்து விரட்டும் பணியை மேற்கொள்ளும் வகையில், இயந்திரம் வடிவமைக்க உள்ளோம். தற்போது, உரம், மருந்து தெளிக்கவும், விதை விதைக்கவும் டிரோன் பயன்படுத்தப் படுகிறது,” என்றார்.
வடிவமைப்பு காப்புரிமை பெற்ற மாணவர்கள் குழுவை, துணைவேந்தர் கீதாலட்சுமி, சக பேராசிரியர்கள் பாராட்டினர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்