“வாக்கு வங்கியை இழக்கவில்லை, வெற்றிவாய்ப்பை இழந்திருக்கிறோம் அவ்வளவுதான்!" – கே.எஸ்.அழகிரி

ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், தெலங்கானா, மிசோரம் ஆகிய ஐந்து மாநிலச் சட்டப்பேரவைகளுக்கான தேர்தலில், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம் ஆகிய மூன்று மாநிலங்களிலும் பா.ஜ.க பெரும் வெற்றியைப் பதிவுசெய்திருக்கிறது. தெலங்கானாவில் மட்டுமே காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றிருக்கிறது. இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் தோல்வி குறித்து தமிழ்நாட்டின் காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி வெளியிட்டிருக்கும் அறிக்கையில், `ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகள் மிகுந்த அதிர்ச்சியைத் தருகின்றன.

பிரதமர் மோடி

காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை பா.ஜ.க-வுக்கு எதிரான கருத்தியலை முன்வைத்ததோடு, மாநிலத் தலைவர்களை மையப்படுத்தித்தான் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் வியூகம் அமைந்திருந்தது. தேர்தலை எதிர்கொள்வதற்கான முழு வியூகங்களை அமைப்பதற்கு மாநிலத் தலைமைக்கு, முழு சுதந்திரம் வழங்கப்பட்டது. தேர்தல் ஆணையம் வெளியிட்ட புள்ளி விவரத்தின்படி, 3 மாநிலச் சட்டமன்றத் தேர்தலிலும் 2018-ல் காங்கிரஸ் பெற்ற வாக்கு சதவிகிதத்தை ஏறத்தாழ மீண்டும் பெற்றிருந்தாலும், வெற்றிபெற்ற இடங்கள் குறைந்திருக்கின்றன.

4 மாநிலச் சட்டப்பேரவைத் தேர்தல்களிலும் காங்கிரஸ் கட்சி 4.91 கோடி வாக்குகளைப் பெற்றிருக்கிறது. ஆனால், பா.ஜ.க 4.8 கோடி வாக்குகள் மட்டுமே பெற்றிருக்கிறது. இந்த புள்ளிவிவரத்தின் அடிப்படையில் பார்க்கிறபோது, காங்கிரஸ் கட்சி தனது வாக்கு வங்கியை இழந்துவிடவில்லை. ஆனால், தேர்தலில் வெற்றிவாய்ப்பை இழந்திருக்கிறோம், அவ்வளவுதான். எனவே, 2024 மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க-வை நிச்சயம் தோற்கடிக்க முடியும். பிரதமர் மோடி ஆட்சியில் கொடுத்த வாக்குறுதிகள் எதையும், கடந்த ஒன்பதரை ஆண்டுகளில் நிறைவேற்றவில்லை.

ராகுல் காந்தி – பிரதமர் மோடி

மாநில உரிமைகள் பறிக்கப்பட்டு, பிரதமர் மோடியிடம் அதிகாரம் குவிந்திருக்கிறது. குறிப்பிட்ட சில தொழிலதிபர்கள் சொத்துகளைக் குவித்திருக்கிறார்கள். அதற்குப் பலனாகத் தேர்தல் பத்திரங்கள் மூலமாக பா.ஜ.க நிதியைக் குவித்திருக்கிறது. தேர்தல் காலத்தில் பா.ஜ.க-வுக்கு இருக்கும் நிதி ஆதாரங்களைப்போல காங்கிரஸ் கட்சிக்கு இல்லாத நிலையில், தேர்தல் களம் சமநிலைத் தன்மையோடு இல்லை.

கே.எஸ். அழகிரி

இத்தகைய பிரச்னைகளின் அடிப்படையில் புதிய வியூகத்தையும், கருத்தியலையும் மக்கள் முன் காங்கிரஸ் முன்வைக்க வேண்டும். ஏறகெனவே கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் பெற்ற வெற்றியைப்போலவே தெலங்கானா மாநிலத்திலும் காங்கிரஸ் கட்சி வெற்றியைப் பெற்று ஆட்சியை அமைக்கப்போவது, மிகுந்த ஆறுதலைத் தருகிறது. கடுமையான உழைப்பின் மூலம் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்ற முடியும் என்பதற்கு தெலங்கானா ஓர் உதாரணமாகத் திகழ்கிறது. அடுத்த தேர்தல்களில் பா.ஜ.க-வை வீழ்த்தி காங்கிரஸ் வெற்றி பெறும்.’ எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.