விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா புகைப்படங்கள் குறித்து வருத்தம் தெரிவித்த நானி

தெலுங்கு நடிகரான நானி நடிப்பில் உருவாகியுள்ள படம் ஹாய் நான்னா. வரும் டிசம்பர் 7ம் தேதி இந்த படம் வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் கதாநாயகியாக மிருணாள் தாக்கூர் நடித்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி ஐதராபாத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியின்போது ஒளிபரப்பப்பட்ட வீடியோவில் எதிர்பாராத விதமாக விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகியோர் மாலத்தீவில் சுற்றுலா பயணம் மேற்கொண்ட போது தனித்தனியாக எடுக்கப்பட்ட புகைப்படங்கள் ஒளிபரப்பாகின. இது படக்குழுவினரை மட்டுமல்ல வந்திருந்த பார்வையாளர்களையும் ஆச்சரியத்திற்கும் அதிர்ச்சிக்கும் உள்ளாக்கியது.

இத்தனைக்கும் இந்த இருவரும் அந்த விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக கூட கலந்து கொள்ள அழைக்கப்படவில்லை. இவர்களது புகைப்படங்களை தேவையில்லாமல் யார் ஒளிபரப்பினார்கள் என்கிற விசாரணை இப்போது வரை போய்க்கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் நானி இதுகுறித்து கூறும்போது, “இப்படி இவர்களது புகைப்படங்கள் ஒளிபரப்பாகும் என்பது யாருமே எதிர்பார்க்கவில்லை. எனக்கே சற்று அதிர்ச்சியாக தான் இருந்தது. இதனால் யாருக்காவது பாதிப்போ சங்கடமோ ஏற்பட்டிருந்தால் அதற்காக நான் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். இது ஹாய் நான்னா படத்திற்கான விளம்பர நிகழ்ச்சியை தவிர தனிப்பட்டவர்களின் விஷயங்களையோ சர்ச்சைகளையோ குறித்து பேசும் நிகழ்ச்சி அல்ல” என்றும் கூறியுள்ளார் நானி.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.