குழந்தைகளுக்கு பிறந்த முதல் ஆறு மாதங்கள் வரை தாய்ப்பால் மட்டுமே போதும். அதைப்போன்று ஊட்டமளிக்கும் உணவு வேறெதுவும் இல்லை. தாய்ப்பாலூட்டும் பெண்களுக்கு குழந்தைக்குத் தேவையான அளவு பால் கிடைத்ததா, எவ்வளவு நேரத்திற்கு ஒருமுறை பாலூட்ட வேண்டும், தாய்ப்பால் அதிகமாக சுரக்க என்ன செய்ய வேண்டும் உள்ளிட்ட பல சந்தேகஙக்ள் இருக்கும்.

தாய்ப்பாலூட்டும் அம்மாக்கள் செய்ய வேண்டியவை, செய்யக் கூடாதவை, சரியான முறையில் பாலூட்டுவது எப்படி போன்ற விளக்கங்களை அளிக்கிறார், தாய்ப்பால் ஆலோசகர் (Lactation Consultant) டீனா அபிஷேக்.
புதிதாக குழந்தை பெற்ற அம்மாக்களுக்கு…
தாய்ப்பால் கொடுப்பதில் அதிக குழப்பங்கள் வேண்டாம். பொதுவாக குழந்தைகள் அதிகமாக அழுதால் வீட்டில் இருப்பவர்கள், `குழந்தைக்குப் பால் பத்தலையோ’ என்பார்கள். அதோடு நிற்காமல், பசும்பாலில் தண்ணீர் கலந்து காய்ச்சிக் கொடுப்பது, பால் பவுடர் கொடுக்கச் சொல்வது என்று அறிவுரைகளை வழங்குவார்கள். இவற்றை எல்லாம் செய்யக்கூடாது. குழந்தையின் அழுகைக்கு உடல்நலக் காரணங்களும் இருக்கலாம். எனவே மருத்துவர் ஆலோசனையின்றி எதையும் செய்யக் கூடாது. எல்லாவற்றையும்விட, குழப்பங்களுக்கு ஆளாகாமல், `இது என் குழந்தை, இதை என்னால் பார்த்துக்கொள்ள முடியும், பாலூட்ட முடியும்’ என்று நீங்கள் முழுமையாக நம்ப வேண்டும்.

சிசேரியன் மூலம் பிரசவித்த அம்மாக்களுக்கு…
இவர்களில் சிலருக்குத் தாய்ப்பால் சுரப்பு ஆரம்பிக்க, பிரசவம் முடிந்து சில மணி நேரம் முதல் ஒன்றிரண்டு நாள் வரை ஆகும் என்பதால் பொறுமையாகக் காத்திருக்க வேண்டும். முதல் நாள் உங்களால் எழுந்து அமர்ந்து தாய்ப்பால் ஊட்ட முடியாது. இந்த நேரத்தில் அம்மா, உறவினர்கள் அல்லது செவிலியரின் உதவியை நாடலாம். அடுத்தடுத்த நாள்களில், குழந்தையை தையல் போட்டிருக்கும் இடங்களில் அழுத்தம் கொடுக்காத வகையில் பக்கவாட்டில் தலையணை வைத்துக் கிடத்தியபடி தாய்ப்பாலூட்டவும்.
தாய்ப்பால் அதிகமாகச் சுரக்க…
குழந்தை பிறந்த முதல் மூன்று நாள்களுக்கு அதன் வயிற்றின் கொள்ளளவே 3 மி.லி முதல் 5 மி.லி அளவுதான் இருக்கும். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக 30 மி.லிக்கு மேல் அதிகரிக்கத் தொடங்கும். அம்மாவுக்கு எந்தவிதமான ஹார்மோனல், உடல்நலப் பிரச்னையும் இல்லாத ஆரோக்கியமான நிலையில், குழந்தைக்குத் தேவையான பாலை உடல் தானாகச் சுரக்கும். தாய்ப்பால் சுரப்பு குறைவாக உள்ளதாக நினைக்கும் அம்மாக்கள், நல்ல ஆரோக்கியமான உணவு முறை, ஸ்ட்ரெஸ் இல்லாத மனநிலை என்று தங்களை தகவமைத்துக்கொள்ள வேண்டும். தாய்மையின் பூரிப்பை பரிபூரணமாக உணர வேண்டும். அதற்கான சப்போர்ட் சிஸ்டமாக அவர்களின் குடும்பம், சுற்றம் இருக்க வேண்டும்.

பாலூட்டும்போது…
’குழந்தை வாய் வெச்சிருக்கு, ஆனா பால் குடிக்குதானே தெரியல’ என்பார்கள் சில அம்மாக்கள். தாடை அசைவை வைத்து குழந்தை பால் குடிக்கிறதா என்பதை தெரிந்து கொள்ளலாம். பெரியவர்கள் சாப்பிடுவதுபோல, அவர்களால் தொடர்ந்து பால் அருந்த முடியாது. எனவே, பால் குடித்துக்கொண்டிருக்கும்போதே தேவைப்படும்போது அவர்கள் ஒரு பிரேக் எடுத்துக்கொள்வார்கள். ஒருவேளை குழந்தை தூங்கிவிட்டால், உங்களுடைய மார்பின் மேல்பகுதிய பகுதியை லேசாக அழுத்தி விடலாம். அல்லது குழந்தையின் தாடைப் பகுதியில் மென்மையாக தேய்த்து விடவும். மாறாக, குழந்தையின் வாயில் மார்புக்காம்பை திணிப்பது, குழந்தையை அடித்து எழுப்புவது போன்றவற்றை செய்யக் கூடாது.
குழந்தை தூங்கும்போது எழுப்பி பால் கொடுக்கலாமா?
பச்சிளம் குழந்தைகள் பெரும்பாலும் தூங்கிக்கொண்டேதான் இருப்பார்கள். ஆனால் அவர்களுக்கு அடிக்கடி தாய்ப்பால் கொடுப்பது அவசியம். பிறந்த முதல் 15 நாள்களுக்கு 2 – 3 மணி நேரத்திற்கு ஒருமுறை தாய்ப்பால் கொடுக்க வேண்டும். இரவு நேரம் தவிர, ஒரு நாளில் 4 – 5 மணி நேரம் வரை தொடர்ந்து தூங்க வைக்க வேண்டாம். குறிப்பிட்ட இடைவெளியில் எழுப்பி பால் கொடுங்கள். எழுப்ப வேண்டும் என்றால், குழந்தையை உருட்டிப் பிரட்டி எடுக்காமல், அவர்களுடைய முதுகு, வயிற்றுப் பகுதியில் மென்மையாகத் தேய்க்கவும். கூடவே தாடைப் பகுதியில் தேய்த்து விடவும். மடியில் எடுத்து வைத்துக் கொள்ளலாம். இதுவே அவர்களை மென்மையாக எழுப்பிவிடும்.

படுத்துக்கொண்டே தாய்ப்பால் கொடுக்கலாமா ?
குழந்தை பிறந்த சில நாள்கள் வரை மிகவும் சோர்வாக உணர்கிற அம்மாக்கள் படுத்துக்கொண்டு தாய்ப்பால் கொடுக்கலாம். இதனால் எந்தப் பிரச்னையும் இல்லை. குழந்தை பாதுகாப்பாக இருக்கிறதா என்பதை மட்டும் பரிசோதித்து, பக்கவாட்டில் படுக்க வைத்துக் கொடுக்கலாம். ஆனால், இதை வழக்கமாக்கக் கூடாது. அம்மாக்களால் எழ இயலாத நேரங்களில் மட்டும் இப்படிக் கொடுக்கலாம்.
சரியான நேர இடைவெளியில் குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுக்கவில்லை எனில், எடை குறைவு ஏற்படும். மேலும், நீர்ச்சத்து குறைபாடும் ஏற்படும. மஞ்சள் காமாலை ஏற்படும் வாய்ப்பும் உள்ளதால் குழந்தைக்கு சரியான வேளையில், இடைவெளியில், தேவையான அளவு தாய்ப்பால் கொடுப்பது அவசியம்.
தொகுப்பு: வெ.கௌசல்யா