கேரள மாநில மக்கள் தங்கள் உரிமைக்காக போராட்டம் நடத்துவதற்கு சளைத்தவர்கள் அல்லர். சொல்லப்போனால் போராட்டத்தையே வாழ்க்கையாகக் கொண்டவர்கள் அங்கு பெரும்பான்மை. அதனால்தான் கேரளா மாநிலத்தில் இடதுசாரி சிந்தனை கொண்டவர்கள் அதிகமாக உள்ளனர். அதில் சில போராட்டங்கள் திடீரென வெகுஜன மக்களின் கவனத்தை ஈர்த்துவிடுகின்றன. அப்படி ஒரு போராட்டம் கேரள தலைநகரான திருவனந்தபுரத்தில் நடந்திருக்கிறது.
கேரள மாநில நிதித்துறை அமைச்சராக இருப்பவர் கே.என்.பாலகோபால். இவரின் மனைவி டாக்டர் ஆஷா, கல்லூரி பேராசிரியராக உள்ளார். இந்த நிலையில் கல்லூரி பேராசிரியர்களுக்கான 39 மாத சம்பள பாக்கியை வழங்கவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக திருவனந்தபுரம் தலைமை செயலகம் முன்பு ஏ.கே.பி.சி.டி.ஏ பேராசிரியர்கள் சங்கத்தின் பேரணி மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அந்தப் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டத்தில் அமைச்சர் கே.என்.பாலகோபாலின் மனைவி, டாக்டர் ஆஷாவும் கலந்துகொண்டார்.

பேராசிரியர்களுக்கு சம்பள பாக்கி வழங்கப்பட்டுவிட்டதாக முதல்வர் பினராயி விஜயன் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசியிருந்தார். ஆனால், சம்பள பாக்கி கிடைக்கவில்லை என அமைச்சரின் மனைவியே போராட்டம் நடத்தினார். நிலுவைத் தொகையை அனுமதிப்பதில் நிதித்துறைக்கும் பங்கு உண்டு என்பதால் நிதித்துறை அமைச்சரையும் எதிர்த்தும் அந்த போராட்டம் நடைபெற்றது. அமைச்சருக்கு எதிராக அவரின் மனைவியே தலைமைச் செயலகத்துக்கு வந்து முன்வரிசையில் அமர்ந்து போராடியது சமூக வலைதளங்களில் வைரல் ஆனது.

அமைச்சர் கே.என்.பாலகோபாலின் மனைவி டாக்டர் ஆஷா, கல்லூரி பேராசிரியர்கள் சங்கமான ஏ.கே.பி.சி.டி.ஏ-வின் மகளிர் பிரிவின் ஒருங்கிணைப்பாளராகப் பொறுப்பு வகித்துவருகிறார். அதனால்தான் டாக்டர் ஆஷா முன் வரிசையில் நின்று போராட்டத்தில் கோஷம் எழுப்பியிருக்கிறார். மத்திய அரசு நிதி ஒதுக்காமல் தாமதப்படுத்துவதால்தான் நிலுவைத்தொகை வழங்குவதில் காலதாமதம் ஏற்படுவதாக அமைச்சர்கள் கூறி வருகின்றனர். ஆனால் போராட்டம் நடத்தியவர்கள் மத்திய அரசுக்கு எதிராக மட்டும் அல்ல, மாநில அரசுக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பினர். கணவர் நிதி அமைச்சராக இருந்தும் மானைவி சம்பள நிலுவைத்தொகை கேட்டு தலைமைச் செயலகம் முன் போராட்டம் நடத்திய ஆச்சர்யமான சம்பவம் பற்றி பலரும் பேசி வருகின்றனர்.